தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட மாவீரர் அனைவருக்கும் வணக்கம் செலுத்தப்பட்ட மாவீரர் நாள் - 2025 நிகழ்வுகள்.

Total Views : 988
Zoom In Zoom Out Read Later Print

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் உட்பட மாவீரர் அனைவருக்கும் வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் புலத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் இவ்வாண்டு மிகுந்த எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் நடைபெற்றுள்ளன.


இவ்வாண்டு தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் தேசியத் தலைவருக்கும் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்கு கொண்டிருந்தமையும் முக்கிய விடயமாகும்.

அந்தவகையில் சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு செல்வன்  சுடர்ச்செழியன் தலைமையில் இடம்பெற்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால்  இறுதியாக, 2008 ஆம் ஆண்டு ஆற்றப்பட்ட மாவீரர் நாள் உரை ஒலிக்க விடப்பட்டது.

உரை நிறைவடைந்ததும் ஐரோப்பிய நேரம் 13.35 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து 13.37 மணிக்கு முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டது.

 முதன்மைச் சுடரினை மாவீரர் லெப்ரினன்ட் கேணல் வீக்கீஸ்வரன் அவர்களின் துணைவியார் திருமதி. ஜீவனா அவர்கள் ஏற்றிவைத்தார்.

 சம நேரத்தில் பெற்றோர், உரித்துடையோர் மற்றும் உறவுகளால் தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட மாவீரர் அனைவருக்குமான சுடர்கள் ஏற்றப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் உறவுகளுக்கு சுடரேற்றி, மலர் வணக்கம் செய்த அதேவேளை, தங்கள் தலைவனுக்கும் அணியாகச் சென்று சுடரேற்றி வணங்கிய காட்சி நெஞ்சை நெகிழ வைப்பதாக அமைந்திருந்தது. 
இறுதியாக அனைவர் முன்னிலையிலும் தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு, இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
 
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு உணவு மற்றும் தேநீர்  என்பன வழங்கி வைக்கப்பெற்றது.