படைப்புக்கள்

மாவீரர் விதைப்பும் , இறுதி வணக்க நிகழ்வும்- மாவீரர் நாள் - 27

மாவீரர் விதைப்பும் , 

இறுதி வணக்க நிகழ்வும்- 

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் - 27


பகுதி-2


செனற்கெலானா தீவில் இறந்த (1821) நெப்போலியனின் உடல் பலகாலத்தின் பின் பிரான்சு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. 

அவருடைய எச்சங்கள் இன்வலிடே கட்டிடத்திலுள்ள தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 


வலு விழந்த போர்வீரர்களின் தங்குமிடமாக 1670இல் பதினான்காம் லூயி மன்னன் இன்வலிடே (INVA- LIDES) கட்டிடத்தை எழுப்பினான். 1950இல் நடந்த கொரிய தீபகற்பப் போரில் வடகொரியாவினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின் சில உடல்கள் மிக அண்மையில் அமெரிக்க இராணு வத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


1975ஆம் ஆண்டு முடிவுற்ற வியற்நாம் போரில் மடிந்த அமெரிக்க வீரர்களின் எச்சங்கள் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுக்கு அதியுயர் இராணுவ மரியாதையுடன் அனுப்பப்பட்டன.


'துயிலும் இல்லம்' என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர். புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண். பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச் சொற்றொடர் உணர்த்துகிறது. 


முதலாவது துயிலும் இல்லம் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில் போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு எரிக்கப்பட்டும் வந்தன. 1991இல் வித்துடல்கள் எரிக்கப்படமாட்டாது. புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. 


இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி - கார்த்திகை விடுதலைப் புலிகள் ஏடு "மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுக்கற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. 


இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலைபெறும்" என்று கூறுகிறது. இம்முடிவானது போராளிகளுள் மிகப் பெரும்பாலனோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது'' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின் முதன் முதலாகக் கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில் 14ஜுலை 1991ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.


வித்துடல் கிடைக்காது போனால் நினைவுக் கற்கள் நாட்டும்வழமை புலிகளாகியஎம்மிடம் உண்டு.அதே சமயத்தில் வித்துடல் ஒருதுயிலும்இல்லத்திலும் அவருக்கான நினைவுக்கல்இன்னுமோர் துயிலும்


இல்லத்திலும் வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.தென்தமிழீழ மாவீரர்பலரின் வித்துடல்கள்விஸ்வமடு மாவீரர்துயிலும் இல்லத்திலும்முள்ளியவளை துயிலும் இல்லத்திலும் விதைக்கப்பட்டுள்ளன.


அவர்களுடையநினைவுக்கற்கள் தென்தமிழீழத் துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப்.கேணல்நாதன். கப்டன் கஜன் ஆகியோரின் வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுத்தப்பட்டுள்ளன .


களப்பலியான போர்வீரர்களுக்கும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிரத்தியேக இடங்களுக்கும் விசேட மரியாதை செலுத்தப்படுவது உலக வழமை. தலைத்தொப்பியை அகற்றியவாறு சிரம் தாழ்த்தி ஒருகணம் துதிப்பது பொதுவான நடைமுறை. 


மிகவும் நேர்த்தியாகக் கலையுணர்வோடு பேணப்படும் பொது இடங்களில் ஒன்றாக போர் வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலங்கள் அமைகின்றன. 


இரண்டாம் உலகப்போரில் 9.386 அமெரிக்கன். 17769 பிரிட்டி. 5002 கனேடியன் மற்றும் 650 போலந்து வீரர்கள் 1944இல் நடந்த நொர்மண்டி தரையிறக்கத்தில் இறந்தனர். 


இவர்களுடைய உடல்கள் 27 இடுநிலங்களில் புதைக்கப்பட்டுள்ளன. 2.5 மில்லியன் ஜப்பானிய போர்வீரர்களின் ஆன்மாக்கள் நினைவாக தலைநகர் தொக்கியோவில் யசுக்குனி போர் நினைவாலயம் மிக அழகாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது. 


கண்டியில் பிரிட்டிஸ் . பிரான்சு, கனடா. கிழக்கு ஆபிரிக்கா, தெற்கு ஆசியாவைச் சேர்ந்த இரண்டாம் உலகப்போர் வீரர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. எதிரிகளுடைய கல்லறையாக இருந்தாலும் அவற்றிற்கு மரியாதை செலுத்திய வாறு பேணிவருவது உலகப் போரியல் பண்பு. 


சிங்களப் படைகளின் யாழ்மீதான ரிவிசெர படை யெடுப்பின்போது கோப்பாய். கொடிகாமம் துயிலும் இல்லங்கள் புல்டோசர் மூலம் சிதைக்கப்பட்டன. இது உலகப் பாரம்பரியத்தை மீறிய காட்டுமிராண்டித்தனம் என்பதில் ஐயமில்லை.


அடுத்ததாக. எமது வீரச்சாவு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். 


களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும். அது ஓரிடத்திற்குக் கொண்டுவரப் படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்குச் சீருடை அணியப்படுகிறது. அதேநேரத்தில் அந்த மாவீர னுடைய விவரங்கள் உறுதிசெய்யப்பட்டு அவனுக்கான பதவிநிலை வழங்கப்படுகிறது. 


பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரன் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன. மாவட்ட அரசியல்துறை ஊடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாதையுடன் பெற்றார் அல்லது உறவினர் வீட்டிற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு அஞ்சலி முடிந்தபின் வீரவணக்க நிகழ்வுக்காக வித்துடல் ஒரு பொதுமண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறது.


அதன்பின் வீரவணக்கக் கூட்டம்மண்டபத்தில் நடத்தப்படுகிறது. முதற்கண் பொதுச் கடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர். 


பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார். மனைவி, கணவன், பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. நினைவுக்கல் நாட்டும் நிகழ்வுக்கும் இதுபோன்ற நடை முறை பின்பற்றப்படுகின்றது. 


நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்ட பின் உரித்தாளரிடம் கொடுக்கப் படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை மலர்அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப் படுகின்றன.


இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும் உடலும் மேடைக்கு கொண்டுசெல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. இப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது.


உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின் இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகின்றது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின் அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர். வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு விதைக்கப்படுகிறது.


அனைவரும் கைகளால் மண் எடுத்து விதைகுழியில் போடுகின்றனர், நடுகல்லானால் மலர்வணக்கம் செய்கின்றனர்.


ஈழத்தமிழினத்தால் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படும் நவம்பர் 27. தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச்சாவடைந்த எமது இயக்க வேங்கை லெப்.சங்கள் (சத்தியநாதனின்) நினைவாக அமைகிறது. 


1989ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு நாம் ஆண்டுதோறும் மாவீரர் நாளைக் கடைப்பிடித்து வருகிறோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவுதான் அனைத்து மாவீரர்களின் நாளாகக் கொண்டாடப்படுவதால் அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு.


1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21 தொட்டு 27வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாகச் சிறப்பிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25. 26. 27ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டுதொட்டு மாவீரர்நாள் நள்ளிரவிலிருந்து மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன்   லெப்டினன்ட்  சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். 


6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் ஒலி எழுப்பும். அதன்பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார். 


உரித்தாளர்கள் போன்றோரால் தீபம் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் தீபம் ஏற்றப் படும். துயிலுமில்லம் வராத உள்ளூர் மக்களும், புலம்பெயர்ந்த உடன்பிறப்புக்களும் தத்தம் இல்லிடங்களில் விளக்கேற்றி வணக்கம் செய்வார்கள்.


மாவீரர் நாளின்போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கவிடப்படும். முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை . 


-விடுதலைப் புலிகள் இதழ்

Leave A Comment