பார்வையில்

லெப். கேணல் தவம் - 17.02.2008

உழைப்பையே உயிராக்கி மலையானவன்

லெப். கேணல் தவம்.

17.02.2008

நிதர்சனக் கலையகத்தின் முன்னணி படப்பிடிப்பாளர் லெப்.கேணல் தவம் அவர்கள் நினைவில்.!


மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன். 


எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.


தவா தான் இருக்கும்போது தன்னைப்பற்றிச் சொன்னதுமில்லை. இல்லாத போது அவர் பற்றிக் கூறுவோருக்குப் பஞ்சமுமில்லை. 


அந்தப் பெருங்கடல் பற்றி அவருடன் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் பற்றிப் பலரும் என்னிடம் கூறியவற்றைத் தொகுத்து வழங்குகின்றேன். 


திருமலையின் திரியாயில் நாராயணபிள்ளை மண இணையர்கட்கு 1966 இல் இரண்டாவது மகனாக முகுந்தன் பிறந்தபோது அந்தக் குடும்பம் நல்ல நிலையில் இருந்தது. 


தகப்பன் கிராமசேவையாளர் உத்தியோகத்தையும் தாய் ஆசிரியத் தொழிலையும் செய்தனர். முகுந்தனுக்கு ஒரு தமையனும் இரண்டு தங்கைகளும் உள்ளனர்.


திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற நாட்களில் விளையாட்டுக்களில் அவனுக்கு நல்ல ஆர்வம். பாடசாலை மட்டம், கோட்ட மட்டம் என்று பல பரிசில்களையும் தட்டிச் சென்றிருக்கிறான். 


சிறந்த தடகள வீரனாகவும் (கிறிக்கற்) துடுப்பாட்ட வீரனாகவும் திகழ்ந்தான். க.பொ.த. சாதாரண தரம் முடித்து உயர் தரத்தில் வர்த்தகத்தைத் தெரிவுசெய்து கற்ற முகுந்தனுக்குக் கல்வியைவிடத் தேசமே பெரிதாகத் தெரிந்தது. சிங்கள இனவாதத்தின் முதற்பொறியாக இருந்தது திருமலை. 


அங்கு சிங்களக் குடியேற்றங்களும் பெருகத்தொடங்க தமிழர் விடுதலைக்கான பயணமும் தீவிரம் பெற்றது. லெப்.கேணல் புலேந்தி அம்மான் திருமலைக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட காலத்தில் 1985.06.08 அன்று தனது வீடு குறித்த பற்றுக்களைத் தள்ளி விட்டுத் தேசத்திற்காகப் பயணமானான் முகுந்தன்.


திருமலை – 02 பயிற்சி முகாமில் புலேந்தி அம்மானிடம் பயிற்சி பெற்றதன் பின்பு அவனது பெயர் தவம், தவம் பேச்சு வழக்கில் தவா ஆகி நிலைத்துப் போனது. 


தவா இயக்கத்தில் இணைந்து கொண்ட அதே ஆண்டு 8ம் மாதம் 10ஆம் நாள் பன்குளம் திரியாய் வீதியில் இருந்த கஜூத் தோட்டத்தில் தவாவின் தகப்பன் உட்பட 16பேரைச் சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். 


ஏற்கனவே கிராமசேவையாளராக அரச சேவை செய்த அவரைச் சிங்களம் கட்டாயம் கற்றுத் தெரிவாக வேண்டும் என்ற சட்டம் பாதிப்புக்குள்ளாக்கியது. அவரது அரசசேவையைப் பறித்தது. தொடர்ந்து தீவிரம் பெற்ற அரச பயங்கரவாதம் அவரது உயிருக்கு உலைவைத்தது. தவாவுக்கு அதுவாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.


அந்த வலியைச் சுமந்து கொண்டே அவர் விடுதலைக்காகப் பயணித்தார். திருமலைத் தாக்குதலணி வடக்கு நோக்கிப் புறப்பட்டது. அப்போது அவருக்கு அகவை பத்தொன்பது. 1986ல் யாழ்ப்பாணம் சென்ற தவா, அல்பேட் வீட்டில் ஒருவனாகினான். கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகச் செயற்பட்ட காலம் அது. 


மதன் வீடு, குப்புவீடு, நம்பர் -3, மெயின் போன்ற நிலையங்களில் ஒன்றான உரும்பிராய், நீர்வேலிப் பகுதியில் அமைந்திருந்த அல்பேட் வீடு சற்றுமாறுபட்டது. அங்குதான் ஆயுதக்களஞ்சியம் , ஆயுதப்பராமரிப்பு, குப்பி அடைத்தல், சக்கைஅடைத்தல் போன்ற வேலைகள் மறைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. தவா அந்தப்பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.


ஆயுதம் பற்றியும் வெடிமருந்து பற்றியும் தேவையான அறிவைப் பெற்றிருந்தார். அதுதான் பிற்காலத்தில் திரைப்படத் தயாரிப்புக்களில் அவரை ஒரு வெடிபொருள் நெறியாளராக உருவாக்கிவிட்டது. அந்தக் காலத்தில் ஒரு முகாமின் சகல வேலைகளையும் போராளிகளே மாறி மாறிச் செய்வார்கள். 


சமையல், துப்பரவு, ஆயுதப் பராமரிப்பு, அன்றாடப் பதிவு என்று இன்றைய நாட்களைவிட எல்லாமே மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. லெப்.கேணல் ஜொனியே இவற்றையெல்லாம் சரிபார்ப்பார். சமையலில் இருந்து சகலவற்றையும் தவாவும் செய்தார். 


21.12.1985 அன்று சுதுமலையில் அமைந்திருந்த கேணல் கிட்டுவின் மையத்தளத்தை அழிப்பதற்காகச் சிங்களப் படைகள் மூன்று பெல் வகை உலங்கு வானூர்திகளோடு சுற்றிவளைப்பைச் செய்தன.


அதை முறியடிக்க அல்பேட் முகாமில் இருந்து போராளிகள் சென்றனர். சண்டை முறியடிக்கப்பட்டது. ஆனால் இவர்களின் அணிக்குத் தலைமையேற்றுச் சென்ற மேஜர் அல்பேட் தவாவிற்கு அருகிலே வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். 


இந்தச் சண்டையில் தவா மிகவும் திறமையாகச் செயற்பட்டமைக்காகக் கேணல் கிட்டு உட்பட அனைவராலும் பாராட்டப்பட்டார். அதன் பிறகு 1986 இல் வசாவிளான் பகுதிக் காவல்நிலைகளில் காவலில் ஈடுபட்டார். 


அங்கு நடைபெற்ற சண்டை ஒன்றில் கையில் சிறு விழுப்புண் இவருக்கு ஏற்பட்டது. இதே ஆண்டு காங்கேசன்துறையில் இருந்த சிங்களப் படைகள் தெல்லிப்பழை ஊடாகப் பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கின.


படையினரை வழிமறித்து நடாத்தப்பட்ட சண்டையிலும் தவா பங்கேற்றார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காகத் தவா தமிழகம் சென்றார். அங்கு மூன்று முறை மூல நோய்க்கான அறுவைச் சிகிச்சை இவருக்குச் செய்யப்பட்டது. 1987 இல் அங்கிருந்து திரும்பவும் நாட்டுக்கு வந்த பின்பு புலேந்தி அம்மான் மீண்டும் தவாவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். 


மீண்டும் திருமலைத் தாக்குதல் அணியில் இணைந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் பணியாற்றிய தவா 1987 இல் மீண்டும் புலேந்தி அம்மானுடன் யாழ் நோக்கிச் செல்கின்றார். 1987 பெப்ரவரி மாதம் கேணல் கிட்டுவின் ஆக்கப்படி நிதர்சனம் நிறுவனம் தொடங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக ஒளிபரப்புச் சேவையும் தொடங்கப்படுகின்றது.


தெல்லிப்பழை, புத்தூர், கொக்குவில், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் ஒளிபரப்பு மையங்கள் செயற்படுகின்றன. 


1987 காலப்பகுதியில் பரதன் அவர்கள் நிதர்சனத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டபோது தவா நிதர்சனத்தோடு இணைந்து கொள்கின்றார். நிதர்சனத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான கப்டன் தீப் தவாவின் ஊர்க்காரர். 


இருவரும் ஒன்றாகச் சேர்ந்து படப்பிப்புக்களில் ஈடுபடுவார்கள். படப்பிடிப்பில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். பின்னாட்களில் ஒரு ஒளிப்பதிவு வல்லுனராகவே அவர் செயற்பட்டார். 


தியாகி திலீபனின் உண்ணாநோன்புக் காலத்தில் கப்டன் தீப்புடன் இணைந்து அந்த வரலாற்று நிகழ்வை படப்பிடிப்புச் செய்தார். அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாகியது.


தன்னை வளர்த்த புலேந்தி அம்மானின் இழப்பு தவாவுக்குள் நெருப்பாய் கனன்றது. தொடர்ந்து இந்திய-புலிகள் போர் வெடிக்கின்றது. அந்த நேரம் இந்தியப் படைகளால் ஊடகங்களே முதலில் முடக்கப்படுகின்றன. 


நிதர்சனமும் தனது உடைமைகளோடு தன்னை உருமறைத்தபடி இந்தியப் படைகளுக்கு எதிராக ஊடகப் போரைத் தொடக்கியது. தென்மராட்சி மீசாலையில் “எம்.ஜி .ஆர். வீடியோ சென்ரர்” என்ற பெயரில் கப்டன் தீப், தவா, பரதன், புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் ஒளிக்கலையகம் ஒன்றை அமைத்து அதன் மறைவில் வேலைகளைத் தொடர்ந்தனர். 


பழைய ஆவணங்களைப் பாதுகாப்பது, புதிய விவரணம் ஒன்றைத் தயாரிப்பதற்கான படப்பிடிப்புக்களில் ஈடுபடுவது இவர்களுடைய வேலை.

இந்தியப்படைகளுக்கு முதலில் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் ஐயப்பாடு இல்லை. கப்டன் தீப், தவா போன்றோர் இந்தியப் படைகளின் நகர்வுகளை மறைமுகமாக இருந்து படம் பிடித்தனர். 


இந்தியப் படைகள் செய்த படுகொலைகள் பற்றி மக்களிடம் பேட்டிகளை பதிவு செய்தனர். இவர்களது பணிகள் இந்தியப் படைகளின் சந்தேகத்திற்கு இடமாகவே ஆவணங்களை தகுந்தமுறையில் மறைத்துவிட்டு வன்னிநோக்கிப் பயணமாகின்றனர்.


”பப்பா அல்பா” என்ற சங்கேதப் பெயருடைய வன்னிக் கானகமுகாம் ஒன்றில்வைத்து நிதர்சனத்தின் பணிகள் தொடர்கின்றன. ஒரு சிறிய கலையகத்தை அமைத்து ஒலிப்பதிவு, படத்தொகுப்பு வேலைகள் தொடங்குகின்றன.


இதுவரை எடுக்கப்பட்ட காட்சிளும் பேட்டிகளும் சேர்க்கப்பட்டு விவரணம் ஒன்று தயாராகின்றது. “இந்திய அரச பயங்கரவாதம் – பாகம் 1, பாகம் 02″ என்ற பெயருடைய விவரணம்தான் உலகிற்கு முதன் முதலில் இந்தியப் படைகள் ஈழத்தில் செய்தது என்ன என்பதை தெளிவாக்குகின்றது. 


இந்த விவரணத் தயாரிப்புக்களை தவா, தீப் ஆகியோர் காட்டுக்குள் இருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் உள்ள வீடியோக் கடைக்காரர்களை அணுகி சமூக நிகழ்வுகளை படம் பிடிக்கும்போது இந்தியப்படைகளின் காட்சிகளையும் படம்பிடித்துத் தருமாறு கேட்டு அக்காட்சிகளைப் பெற்று விவரணத்தில் இணைத்தனர்.


அந்தச் சந்தர்ப்பம்தான் வன்னி எங்கிலும் வீடியோக் கடைக்காரர்களையும் மக்களையும் தவாவிடம் நெருங்கவைத்தது. தவாவிற்குத் தெரியாத வீடியோ. நிழற்படக் கடைக்காரர்கள் இல்லை என்னும் அளவிற்கு அந்த உறவு வலுப்பட்டது. 


தவாவிற்குத் தெரியாத ஊர்களும் இல்லை. அவரை அறியாத மக்களும் இல்லை. “கானகத்தில் ஒரு நாள்” சிலநூற்றுக்கணக்கான போராளிகளின் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை எடுத்துக் காட்டிய படம். 


தவாதான் இதற்கும் படப்பிடிப்பு. இந்தக்காலத்தில்தான் ஒட்டுசுட்டான் கோயில் திருவிழாவில் ஒரு அருமையான பாடகரை ஒரு வீடியோ ஒளிநாடா மூலம் தவா இனம் கண்டார்.


உடனே புதுவை அண்ணரிடம் உங்களுக்கேற்ற பாடகர் ஒருவர் இருக்கிறார் எனச்சொல்லி வைத்தார். இந்தியப் படைகள் புறப்பட்ட கையோடு கண்ணாடிச் சந்திரனும் தவாவும் சென்று அந்தப் பாடகரிடம் தொடர்புபட்டு கலை, பண்பாட்டுக் கழகத்துடன் இணைக்கின்றனர். அவர் பாடகர் சாந்தனாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாகக் காரணமானதும் தவாதான்.


தொடர்சி…........

Leave A Comment