பார்வையில்

வரலாறு உருவாக்கிய வழிகாட்டி! - சிவசக்தி

வரலாறு உருவாக்கிய வழிகாட்டி! - சிவசக்தி
எக்காலத்திலும் எவராலும் ஏற்றுப்போற்றக்கூடிய உன்னத தலைவன். இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே... உள்ளோடி.... குருதிக்கலங்களில் வீரத்தையும் மானத்தையும் பொங்கியெழச் செய்யும் வல்லமை.... 
உலகவரலாற்றில் காலத்துக்கு காலம் தலைவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.. ஆனால் காலத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற தலைவன் எங்கள் பிரபாகரன் அவர்களே

ஆண்டுகள் பலவாய் அழுது துடித்திருந்தது தமிழரினம். தமிழர்களின் முன்னாள் அரசியல் தலைவர்கள் அமைதிவழிப் போராட்ட வழிமுறைகளினால் எமது உரிமைகளைப் பெற்றுவிடலாம் என நம்பினார்கள். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார்கள்... ஆனால் தமிழர்களின் உரிமைப்போரை முளையிலேயே நசுக்கிவிட எண்ணிய சிங்களப்பேரினவாதம் அமைதிவழியில் போராடிய தமிழ்த்தலைவர்களையும் தமிழ்மக்களையும் ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கியது. இலங்கைத்தீவு முழுவதிலும் தமிழரின் குருதி வழிந்தோடியது....

இந்நிலையில்தான்... 

' எங்களுக்காக குரலெழுப்ப... கொடுந்துயரங்களிலிருந்து எங்களை மீட்க ஒருதலைவன் பிறந்துவரமாட்டாரா... ?' என எம்மினம் ஏங்கிக் கிடந்தது. அந்த வேளை... 

மேகம் அடித்துப்பொழிய... மின்னல் வானத்தை பிளந்தெறிய... கடலலைகள் அடித்துப் புரள..... வல்வெட்டித்துறையெனும் வரலாற்று மண் எங்கள் வீரத்தலைவனைப் பெற்று மகிழ்ந்தது.

ஈழத்தமிழர்களின் இருண்டுகிடந்த வாழ்வில் ஒரு புதிய சூரியன் பிரபாகரனாய் உதித்தது! 

எங்கள் தலைவனின் முகத்தில் தெரிந்த அமைதிக்குள் ஆழ்ந்திருந்த வீரம்... காலத்தின் கணிப்பில் அக்கினியாய் பிரவாகமெடுத்தது. பதினாறு வயதில் தன் இனத்தின் அடிமைவிலங்கை உடைத்தெறிய திடசங்கற்பமேற்றார் எங்கள் தலைவர்!

அடிப்பவனுக்கும் அதன் வலி தெரியவேண்டும். இதுதான் எங்கள் தலைவனின் உள்ளத்தில் உதித்த பேரெண்ணம். 

ஆயுதங்களால் எம்மை அடக்க நினைப்பவர்களிடமிருந்து வெற்றுக்கைகளால் இரந்து... எமக்கான உரிமைகளை மீட்கமுடியாது என்பதை எம்தலைவர் உறுதியாகத் தெரிந்துகொண்டார். 

வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க... மக்கள்விடுதலைப் படையை உருவாக்கிய நேதாஜி சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கை வரலாறு எம் தலைவருக்கான வரலாற்றின் அரிச்சுவடியாய் வழிகாட்டியது....

வலிமை! இதுதான் எங்கள் தலைவர் ஏற்றுக்கொண்ட ஆயுதம். வலிமையற்றிருக்கும் எந்த இனமும் தலைகுனிந்து அடிமையாகிப் போவதுதான் காலம் சுட்டிக்காட்டிய பாடம்..... 

எனவேதான் விடுதலைப்புலிகள் என்னும் பெரும்படையை உலகிற்கு எடுத்துக்காட்டாக உருவாக்கினார். இப்படையின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வழுவாத வீரமும் உலகின் விழிகளை வியக்க வைத்தன....

தரை, வான், கடலென்ற முப்படைப்பிரிவுகளையும் நேர்த்தியாக வழிநடத்திய தனிப்பெருந் தலைவர்!

காலங்காலமாய் அடிமைச்சுழலில் சிக்கித்தவிக்கும் தமிழினம்... அதிலிருந்து விடுபட்டு,  வலிமைமிக்க இனமாகத் தலைநிமிர்ந்து வாழவேண்டும் அவரது இலட்சியம்.....

தனக்கென்றோர் மொழி... தனித்துவமான கலை பண்பாடு, வாழ்க்கை நெறிமுறைகள் எல்hவற்றையும் கொண்ட தொன்மைமிக்க தமிழினத்தை தோளுயர்த்த வைக்க அவர்; செயலாற்றத் தொடங்கினார்.

செயல்.... சொல்லுக்கு முன்னால் எப்போதும் செயலிருக்க வேண்டும் என்பதையே  எங்கள் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்கள் வகுத்திருந்தார். மேடைகளில் முழங்கிவிட்டு... வீடுகளுக்குள் முடங்கிப்போகும் வாழ்வுமுறையை அவர் வெறுத்தார்.

வழிவழியாக அவநம்பிக்கைகளுக்குள் புதைந்திருந்த மனங்களில் நம்பிக்கையின் வெள்ளொளியைப் பாய்ச்சும் ஒளிமுதலாய் உருவெடுத்தார் எம்தலைவர். 

' விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி... ' என்றார் அவர். 

மானத்தமிழர்களின் வீரத்தை உரைத்துநிற்கும் புறநானூறு சொல்வதுபோல், 'வழிபடுவோரை வல்லறிந்த ' தலைவனாய் எம்முடனிருப்பவர். 

ஒன்றாய்.. இரண்டாய்... ஒவ்வொன்றாய்... மக்களுடைய மனவெளிகளில் நம்பிக்கைதரும் நாற்றுக்களை அவர் நாட்டினார். இயலாமையின் உச்சக்கட்டத்தில் விரக்தியுற்றிருந்த மனிதர்களை.... வாய்ச்சொற்களால் மாற்றியமைக்காமல்... தனது முழுமையான செயற்பாடுகளால் மாற்றியமைத்தார் அவர்..

எம்மைத் தொடர்ந்து அடிமைப்படுத்த நினைக்கும் ஒடுக்குமுறையாளர்கள்... எமது வளர்ச்சியைப் பொறுக்க முடியாது.... எம்மைப்பணிய வைப்பதற்காய் ஒருகட்டத்தில் பொருளாதாரத்தடையை எம்மீது செலுத்துவார்கள் என்பதை அவர்; தீர்க்கதரிசனமாகச் சிந்தித்திருந்தார். 

அவர் எண்ணியதுபோலவே ஸ்ரீலங்கா அரசு முந்நூற்றுக்கு மேற்பட்ட பொருட்களை தமிழர்பகுதிகளுக்கு செல்லவிடாது பொருளாதாரத் தடையை திணித்தது.  

அவ்வேளை.... அவரது சிந்தனையில் பொருண்மியக் கட்டமைப்பு பிறப்பெடுத்தது. 

அதனால் எம் தரிசுநிலங்கள் பூப்பெய்தின... உணவுப்பயிர்களும் சிறுதானியங்களும் சுயஉற்பத்திகளும் பெருகின.... உள்ளுர் உற்பத்தியாளர்கள் தலைநிமிர்ந்தார்கள்...  பிச்சையெடுத்தலோ... பட்டினிச்சாவோ... எம்மண்ணில் இல்லையென்றானது...

பெண்வழிச் சமுகமான எம்தமிழ் சமுகத்தில்... பெண்கள் இரண்டாம் நிலைமனிதர்களாக அடக்கப்பட்டிருந்தார்கள். அறியாமையென்னும் பேரிருளில் ஆழப் புதைந்திருந்தது பெண்சமுகம். 

மண்விடுதலையோடு பெண்விடுதலையையும் இணைத்துக்கொண்டார் தலைவர் பிரபாகரன் அவர்கள். பெண்ணைப்பழித்தும் இழித்தும் நின்றவர்கள் திகைத்துப்போகும் படியான வீரத்தையும் விடுதலையுணர்வையும் பெண்களுக்குள் உருவாக்கினார் எம் தலைவர்!

இருளை ஊடறுக்கவும், காடுகளில் கரந்துறையவும், நீரின் அடியிலே நீள்பயணஞ் செய்யவும், வானத்தை தொட்டுச்செல்லவும் பெண்களை வளர்த்தெடுக்க ஆண்தாயாக மாறியவர் அவர். 

அவரது மேலான எண்ணத்தின் உருவாக்கங்களாக அறிவியல், ஊடகம், கல்வி, அரசியல், நிர்வாகம், என எண்ணற்ற துறைகள் உருவாக்கப்பட்டு, அனைத்திலும் திறமைகள் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. 

சமுக அங்கீகாரமில்லாது நலிவுற்றிருந்த கலைத்துறைக்கு எம்தலைவர் புத்துயிர் அளித்தார். தேசத்தின் மூலைகளில் வறுமையுடன் போராடியபடி முடங்கிக்கிடந்த பலநூற்றுக்கணக்கான கலைஞர்கள் வெளியுலக தரிசனம் பெற்றார்கள்.... 

போரியல் வரலாற்றில் மட்டுமல்லாது மனிதவாழ்க்கைக்கும் பயனளிக்கும் வகையிலான புதிய உத்திகளை எம்மினத்திற்கு எடுத்துச்சொல்லியவர். ஆனாலும் எம் தலைவர் ஒருபோதும் போதித்தவரல்ல... மாறாக மேலாண்மைத் திறனோடு தானே பிறர்க்கு வாழ்ந்து காட்டியவர்....

எங்கள் தாய்மண்ணிலே நிர்க்கதியாக யாரும் நின்றலையக்கூடாதென்ற பெருநோக்குடன் சிறுவர்காப்பு இல்லங்களையும்.. மூதாளர்; இல்லங்களையும் தோற்றுவித்து.... அவர்களை பாதுகாத்துப் பேணிய பெருமை எம் தலைவருக்கே உரித்தானது.....

பல்வேறு நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமுகத்தின் கேலிக்குரியவர்களாய் ஆகிவிடக்கூடாதென்பதற்காய்... அவர்களின் பிரச்சினைகளை உய்த்தறிய பெண்கள் ஆய்வுநிறுவனத்தையும்... அவர்களை சொந்தக்கால்களில் வாழவைக்க பெண்கள் புனர்வாழ்வுக் கழகத்தையும் அமைத்த நுண்திறன் கொண்டவர்!

போரில் விழுப்புண்ணுற்ற போராளிகள் கவனிப்பாரற்ற நிலையில் கையேந்துபவர்களாகிவிடக் கூடாதென்ற தூரநோக்குச் சிந்தனையோடு.... அவர்களுக்காக... ஒரு கட்டமைப்பை உருவாக்கி... நேரடியாக அவர்களின் குறைநிறைகளில் அக்கறை செலுத்தியவர்....

போர்நெருக்கடிகளுக்குள் வாழும் மக்கள் நடுவே... குற்றச் செயல்கள் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காக தமிழீழக் காவற்றுறை எனும் நிர்வாக அலகைத் தோற்றுவித்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தியதுடன்... காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பது, சமுகத்தை நெறிப்படுத்துவது என்பதை எல்லோருக்கும் புரியவைத்தார்.

உலகநாடுகளும்... மக்களும் அவரது எளிமையையும் வலிமையையும் புகழ்ந்து நின்றபோதும்.... இறுமாப்பற்று... எளிமையாகத் திகழ்ந்தவர்.... மனிதத்தை மதித்துப் போற்றியவர். மானுட விழுமியங்ளை காத்தவர்....

அன்பும் கருணையும் காதலும் வீரமும் நிறைந்த பேராளன் எம்தலைவர் பிரபாகரன் !
எங்கள் தலைவர்தான் எங்களின் தேசத்தின் குறியீடு. எமது இனத்தின் உன்னத அடையாளம்.... 
அடிக்கவரும் கைகளை உடைத்து, தடுக்கவரும் தடைகளைத் தகர்த்து, முடியாதென்ற நிலைமைகளை முடித்து பெரும் வரலாற்றுப்பயணத்தில் வீரநடை காட்டியவர்!
கூர்மையான போரியல் திட்டங்களை வகுத்து... எதிரிகள் இறுமாந்திருந்த எத்தனையோ படைமுகாம்களைத் தகர்த்து... வெற்றிகளை எமக்காக்கிய எம் தலைவர்!
நெல்லியடி அவரின் நெற்றியடி!
பலவீனப்படுத்pவிடத் துடித்த எதிரிக்கு தமிழன் யாரெனத் தெரியவைத்த ஒற்றையடி
பூநகரியின் ஈரூடகத் தாக்குதல் ஊடாக எதிரியைக் கதிகலங்கவைத்தவர்.... ஆனையிறவு எதிரிகளுக்கு அடுத்த அதிரடி....  

மணலாற்றுக் காட்டில் கால்பதித்த இந்திய அமைதிப்படையின் ஒவ்வொரு படையினனும் தமிழ்வீரத்தை வீரத்தை தெரிந்துகொள்ள வைத்தவர் எம் தலைவர்

யாழ்குடாநாட்டைவிட்டு துரத்திவிட்டோம்... தொலைந்தது தொல்லை என பகைவன் நினைத்திருந்தபோது தான்  பகைக்குகை முல்லைத்தீவில் நிர்மூலமாக்கப்பட்டது!

வலிமை! இதைத்தான் தன்னுடைய ஒவ்வொரு வீரனுக்கும் எம்தலைவர் சொல்லிக் கொடுத்தார்... நாங்கள் வலிமையாக இருக்கும்வரை எதிரி பணிந்திருப்பான் என்பதே அவர் கற்றுத் தந்த பாடம்!

தோல்விகளையோ பின்னடைவுகளையே நெஞ்சுநிமிர்த்தி நேருக்கு நேராகச் சந்திக்கும் நேர்மை கொண்டவர்... எமது போராட்டம் சதுரங்க விளையாட்டு என்றால் ... அதிலே  துல்லியமாக காய்களை நகர்த்தும் வல்லமை எம் தலைவர்!

சிங்களப்பேரினவாதம் கோபங்கொண்டு கோரப்பற்களோடு நெருங்கிவந்த வேளையெல்லாம்.... அதன் துடுக்கடக்கி தமிழினத்தை பாதுகாத்தவர் அவர்.... 

தன்னினத்தை பாதுகாப்பதற்காய் முப்பெரும் படைகளை உருவாக்கி... தரை, வான், கடல் முழுவதையும் ஈழத்தமிழரே கட்டியாண்ட பெரும்பேற்றை... உலகமே வியந்து பார்க்கும் வகையில் வளர்த்தெடுத்த தலைவர்

மக்களை அரசியல்மயமாக்காது விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பது இலகுவானதல்ல என உரைத்த எம்தலைவர், அரசியல்பணி என்பது மக்களுக்கு சேவையாற்றுவது என்பதையும் சொல்லிவைத்தார்...... அதனூடாக மக்களையும் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்கவைத்து.... தமிழர்தாயக விடுதலைப் போராட்டமென்பது.... மக்கள்போராட்ட வடிவமாக முன்நகரச் செய்தார்!

தாயகம்

தேசியம்!

தன்;னாட்சியுரிமை!!

இவைதான் தமிழனின் இதயத்தின் ஒலியென உணர்த்தியவர் எம் தலைவர்

எளிமையான வாழ்க்கையும்... தனித்துவமான சிந்தனையும்... எத்தடைகளையும் தகர்த்தெறிந்து தன் இலக்குநோக்கிப் பயணிக்கும் பேராற்றலும்.... தன் அணியினரை சிறப்பாக வழிநடத்தும் மிடுக்கும்... குலையாத இலட்சிய உறுதியும் கொண்டவர் ....

எமக்கு ஒரு நாடுவேண்டும்!

எமது மக்களுக்கு விடுதலைவேண்டும்!

எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும்!

இவைதான் எமது தேசியத் தலைவரின் இலக்குகள்

 போத்துக்கேயர்களுக்கும், ஒல்லாந்தர்களுக்கும், பின்னால் வந்த ஆங்கிலேயர்களுக்கும் சிம்ம சொப்பனமாகி, தமிழன் என்கின்ற பெயரைக்கேட்டாலே நடுநடுங்க எம் வைத்த முன்னோர்களின் வீரம்.... மீண்டும் எம்மண்ணில் தளைத்தது எங்கள் தலைவர் பிரபாகரன் காலத்தில

இயற்கை எனது நண்பன்...
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்....
வரலாறு எனக்கு வழிகாட்டி... என வரித்துக்கொண்டவர் அவர்!

குறைவாகப் பேசவும்... நிறைவாக வேலைசெய்யவும் எடுத்துக்காட்டானவர்.... நான் என்கின்ற கர்வமின்றி... நாங்கள் எனச் சிந்தித்து செயலாற்றும் பண்புகளின் பிறப்பிடம் அவர்.... 

தாயகவிடுதலையின் பயணத்தில் இணைந்து, தங்கள் உயிர், பொருள்,ஆவியென அனைத்தையும் விடுதலைக்காய் அர்ப்பணித்த... மாவீரர்களையும் அவர்தம் பெற்றோர் உறவுகளையும் மதித்துப்போற்றியவர். மாவீரர்களை மனதிருத்தி தொழுதவர்!

களத்தில் பெருவெற்றிகளையும் உலக அரசியலில் பல மாற்றங்களையும் நிகழ்த்துவதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மின உறவுகள் அளித்த பங்களிப்பை எப்போதும் விதந்துரைத்தவர்... புலம்பெயர் இளையோரின் செய்றபாடுகளை ஊக்குவித்து,... உலக அரங்கில் எமது இனத்தின் பிரச்சினைகள் பேசப்படவேண்டும்... அதனூடாக எமது இனம் காலாதிகாலமாக பட்டுத்துடிக்கும் இன்னல்களை வெளியுலகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என எண்ணியவர்!    

தர்மமும் சத்தியமும் எப்போதும் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை என்கின்ற உணர்வை எப்போதும் உணர்த்துபவர்...

„ சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது... „  என்கின்ற வள்ளுவனின் கூற்றிற்கு அமைவாக எவராலும் வெல்லப்பட முடியாத தலைவனைப் பெற்றவர்கள் நாம்.  

இத்தனைசிறப்புகளும் கொண்ட தலைவனைப் பெற்ற நாம் பெருமிதப்படவேண்டியவர்கள்! 

-சிவசக்தி

Leave A Comment