பார்வையில்

மாதந்தை வேலுப்பிள்ளை -06.01.2010

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை

அவர்களின் வீர வணக்க நாள் இன்றாகும

06.01.2010

.

தமிழினத்தின் வீரமிக்க தலைவனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.




உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது.


86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மை யார் அவர்களையும் கடந்த 8 மாதங்களாக வதை முகாமில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு. 


அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பக்குவமான உணவுகள் எதுவும் அளிக்காமல் சிறுகச்சிறுக சாகடித்த கொடுமையைச் செய்த இராசபக்சே அவரது மர ணம் இயற்கையானது என பசப்புகிறார்.


கடந்த 8 மாதத்தில் அவர்களைச் சந்திக்க யாரையும் இராசபக்சே அனு மதிக்கவில்லை. தமிழக முதல்வர் கருணா நிதி அனுப்பிவைத்த நாடாளுமன்ற குழுவினர்களாவது அவர்களைச் சந்திக்க முயற்சிசெய்திருக்க வேண்டும். 


இராச பக்சேவைச் சந்திக்கும் போது அவர் களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தி யிருக்க வேண்டும். ஆனால் இக்குழு வினர் அவ்வாறு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறிவிட்டார்கள்.


வெளிநாடுகளில் வாழும் பிரபாகரனின் சகோதரியும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனும் தங்கள் பெற்றோரை தங்களிடம் அனுப்பி வைக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் இராசபக்சே மதிக்கவில்லை. 


அய்யா வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு இராசபக்சேயே பொறுப்பாவார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.


தனது சாவிலும் தானொரு வீரனின் தந்தை என்பதை அய்யா வேலுப்பிள்ளை நிரூபித்திருக்கிறார். 


இராசபக்சேயிடம் முறையிட்டு விடுதலை பெற விரும்பாமல் இறுதிவரை வதை முகாமிலேயே வாழ்ந்து அந்தக் கொடுமைகளை அனுபவித்து கொஞ்சம்கூட கலங்காமல் இருந்து மறைந்திருக்கிறார்.


அவர் மறைவிற்குப் பிறகு உலகெங்கும் எழுந்த கண்டனக் குரலுக்குப் பணிந்து அவர் உடலை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சிவாஜிலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்க இராசபக்சே முன்வந்திருக்கிறார். 


அவரது உடலுக்கு இறுதிமரியாதை செலுத்த உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பிலும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பிலும் வழக்கறிஞர் என். சந்திரசேகரன் அனுப்பப்பட்டுள்ளார்.


வல்வெட்டித்துறையில் புகழ்பெற்ற குடும்பமான திருமேனியார் குடும்பத்தில் பிறந்தவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஆவார். 


இக்குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வேங்கடாசலம் என்பவர் அவ்வூரில் உள்ள வல்லைமுத்து மாரியம் மன் கோவில், வல்லை வைத்தீஸ்வரன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோவில் ஆகிய மூன்று முக்கிய கோயில் களை கட்டினார். 


திருவேங்கடம் வேலுப் பிள்ளை திருமதி வல்லிபுரம் பார்வதி அம்மையார் ஆகியோருக்குப் பிறந்த கடைக்குட்டிப் புதல்வரே பிரபாகரன் ஆவார். இவருக்கு மனோகரன் என்ற மூத்த சகோதரரும் ஜெகதீஸ்வரி, வினோதினி இரு மூத்த சகோதரிகளும் உண்டு.


திருவேங்கடம் பிள்ளை தனது 19ஆம் வயதில் இலங்கை அரசுப்பணி யில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்டக் காணி அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றார். 


அரசுப் பணி யில் இவர் இருந்த காலத்தில் ஏராளமான தமிழ் மக்களை அரசு நிலங்களில் குடி யேற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். நேர்மையுடன் பணியாற்றி புகழ்பெற்றார். 


ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவராகத் திகழ்ந்தார். தந்தையிடமிருந்த இந்த நற்பண்புகள் பிரபாகரனிடமும் எதிரொலித்தன. 


தமிழர்களுக்காகப் போராடும் மனஉறுதியை பிரபாகரன் தனது தந்தையிடமிருந்தே பெற்றார் என்றுதான் கூறவேண்டும்.


பெற்றோரின் செல்லப் பிள்ளை யாகத் திகழ்ந்த பிரபாகரன் மீது அவரது தந்தைக்கு மிகவும் அன்பு. எங்கு சென்றாலும் தனது செல்ல மகனையும் அழைத்துக்கொண்டு போவார். 


அப்படிச் செல்லும்போது சிங்களக் காவல்துறை யினர் அப்பாவித் தமிழர்களை அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்து சிறுவனான பிரபாகரன் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். 


இந்த நிகழ்ச்சிகள் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன.


1956ஆம் ஆண்டு பண்டார நாயகா பிரதமராக இருந்த போது சிங்கள மொழியை அரசு மொழியாக ஆக்கும் சட்டத்தை இயற்றினார். 


அந்த சட்டத்தை மிகக்கடுமையாக விமர்சித்து வேலுப் பிள்ளை பேசியதை சிறுவனான பிரபாகரன் கேட்டு கோபமும் கொதிப்பும் அடைவது வழக்கம். அந்த வயதில் தந்தை மூட்டிய தீ பிரபாகரனின் மனதில் புரட்சித் தீயாக மூண்டு வளர்ந்தது.


Leave A Comment