படைத்துறைகள்

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில்…

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில்…


‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன்.




சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் விவேகத்தின் ஆற்றலின் ஆதாரம்.விடுதலையின்றேல் வாழ்வில்லை போராட்டமே வாழ்வென்று ஆகியிருந்த காலத்தின் கட்டளையை ஏற்றுச் சிரித்திரனும் புலி வீரனாகியது 1996ம் ஆண்டு. யாழ்மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு வீழ்ந்த வீரம் வன்னியில் புதுப்பிக்கப்பட்ட தருணமது.


விழவிழ எழும் வீர மரபைக் கொண்ட வீரத்தின் வேர்களின் வழியில் தன்னையும் இணைத்த சிரித்திரன் விசுவமடுவில் அமைந்திருந்த மாறன் 1 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டான்.


முதல் கள அனுபவம் கிளிநொச்சி ஊடறுப்புச் சமராகும். சமர் முனையில் சிரித்திரன் சிறந்த வீரனாய் தனது திறனை வெளிக்காட்டிய போராளி. போர்க்களத்தையே அதிகம் விரும்பிய தாய்மண் விரைவில் வெல்லப்பட வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரியப்புலியவன். முதல் கள அனுபவம் முடிந்து வந்த வீரன் 1998 இல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் பயிற்சிக்குத் தெரிவாகினான். சிறப்பாய் பயிற்சிகள் முடித்து விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ வீரனாகினான். கவசங்களை உடைத்து எதிரியை நிலத்திலிருந்து விரட்டி விடியலைத் தேடி விழித்திருந்த தென்றல் அவன்.



RPG என்ற ஆயுதத்தை சிறிலங்காப் படையினருக்கு அறிமுகம் செய்தவர்கள் புலிகள். ஏனெனில் புலிகள் இவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின்னரேயே சிறிலங்கா படை RPGஐ பாவிக்கத் தொடங்கியது.


யாழ் மண் எதிரியிடம் பறிபோன பின்னர் வன்னியில் 1996 நடுப்பகுதியில் RPGகொமாண்டோப் பயிற்சிகள் நடைபெற்று RPG அணியொன்று உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்த RPG அணியானது கிளிநொச்சியைக் கைப்பற்ற முனைந்த சத்ஜெய நடவடிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக களமிறக்கப்பட்டது.




சிறு அணியாக உருவாக்கம் பெற்றிருந்த RPG அணியானது அப்போது சிறப்பான பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்காமல் ஒரு படையணியின் சிறு அணியாகவே செயற்பட்டிருந்தது. சத்ஜெய சமரில் எதிரி அதிகம் டாங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டே படை முன்னேற்றங்களை மேற்கொண்டான். அந்தக் காலத்தில் எதிரியின் டாங்கிகளை எதிர்பார்த்த அளவு அழித்தொழிக்கும் வலுவை RPG படையணி கொண்டிருக்கவில்லை. அப்போது தான் RPG கொமாண்டோ அணியை புதிதாய் வடிவமைக்கும் நோக்கம் தலைவர் பிரபாகரன் அவர்களால் வித்திடப்பட்டது. எப்போதுமே எதிர்காலத்தேவைகளை முற்கூட்டியே உணர்ந்து செயற்படும் தலைவரின் நேரடியான கவனிப்பில் உருவாகியதே RPG கொமாண்டோ அணி. (விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி)


இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ் ‘கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்’ எனும் சுலோக வாக்கியங்களைக் கொண்டு ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ உருவாக்கம் பெற்றது. 1997 தொடக்கத்தில் முதலாவது ‘விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று ‚விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாறு ஆரம்பமாகியது.


இப்படையணியின் சீருடை நெடுக்கு வரிச்சீருடையாகும். ஏனைய படையணிகளிலிருந்து இப்படையணியானது வித்தியாசமாகவே அறிமுகமானது. இப்படையணியின் முதல் களம் ஜெயசிக்குறு களமாகும். ஜெயசிக்குறு ஆரம்பித்து முடிவதற்கிடையில் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி வீரர்கள் அதிகளவில் வீரச்சாவடைந்தார்கள். எனினும் புதிய புதிய அணிகள் வேகவேகமாகப் பயிற்சிகளை முடித்துக் களத்தில் நின்றார்கள். ஜெயசிக்குறு வெற்றியில் இப்படையணியின் பங்கும் காத்திரமானது.



கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனமடைந்து சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளாக இருந்தார்கள். வன்னியின் மீட்பில் கவசப்படையணியின் பங்கு உணரப்பட்டு தலைவரால் உருவாக்கப்பட்ட இப்படையணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்று இறுதிவரை ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வேராக விழுதாக வாழ்ந்து வீரச்சாவடைந்தார் தளபதி லெப்.கேணல்.அக்பர் அவர்கள். ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாற்றில் அக்பர் அவர்களைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாத அளவு அக்பர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆணிவேராகியதை என்றென்றும் வரலாறு சுமந்து கொண்டே செல்லும்.


இவ்வாறு பல தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் தியாகத்தால் உருவாகிய ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் சிரித்திரனும் இணைந்து கொண்டதும் கவசங்களை உடைத்ததும் இன்னொரு வரலாற்றின் பரிணாமம் தான்.


யுத்தம் சமாதானம் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமொன்றை சர்வதேசத்தலையீடு உருவாக்கிய காலம். 2001 சிங்கள ஆளஊடுருவும் படையணி ஆதிக்கம் வன்னி நிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது RPGகொமாண்டோக்களின் தேவைகளும் அவசியமும் குறைந்த காலம்.

சிங்கள ஆள ஊடுருவும் படையணியின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய சவால் நிறைந்த நேரமது. RPGகொமாண்டோவில் இருந்த போராளிகள் தரைக்கரும்புலியாவதற்கு தங்களை இணைக்குமாறு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தார்கள். அவர்களில் சிரித்திரனும் தரைக்கரும்புலியாக தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான். கரும்புலிகளுக்கு நிகரான ஆள ஊடுருவும் படையணியின் உருவாக்கத்தை தலைவர் தனது நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பிப்பதற்கான தருணமும் வந்தது. அப்போது திடீரென ஒருநாள் கரும்புலிகளுக்காக கடிதம் எழுதிய போராளிகளைச் சந்தித்தார். கரும்புலியாக விரும்பிய அனைவரையும் புதிதாக உருவாக்கம் பெறும் ஆளு ஊடுருவும் அணிக்கான பயிற்சிக்கு தயாராகுமாறு அழைத்தார்.


தலைவன் அருகாமையில் தலைவனின் கண்காணிப்பின் கீழ் அமைந்த அந்த சிறப்பு அணியில் எங்கள் சிரித்திரனும் இணைந்து கொண்டான். குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட வேண்டிய தெரிவுப்பயிற்சிகளில் சிரித்தின் தனது திறனை வெளிப்படுத்தி தெரிவாகி சிறப்புப் பயிற்சியினை முடித்திருந்தான். இக்காலத்தில் திறமையாகச் செயற்பட்ட சிரித்திரனின் திறமையை அவதானித்த ரட்ணம் மாஸ்ர் தலைவரின் பாதுகாப்புப் பணியில் சிரித்திரனை இணைத்துக் கொண்டார். அவனது ஆற்றலும் எடுத்த காரியத்தை சாதிக்கும் வல்லமையும் தலைவரின் பிரத்தியேக உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்டு தலைவரின் நன் மதிப்பையும் அன்பையும் பெற்றான் எங்கள் சிரித்திரன்.


சிரித்திரன் என்றால் அவனை யாரும் மறந்துவிடமாட்டார்கள் அந்தளவு எல்லோருக்கும் பிடித்த போராளி. அவனது சிரித்த முகம் , அவனில் சிறப்பாயமைந்த பண்புகள் , எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் பன்முக ஆற்றலுமே எல்லோரிடத்திலும் அவனை அடையாளப்படுத்தியது. சிறந்த சண்டைக்காரன் மிகப்பெரும் ஆற்றலையெல்லாம் அள்ளி வைத்திருந்த பெருமைக்குரியவன் ஆனாலும் தனது கரும்புலிக் கனவை கைவிடாமல் தலைவரின் பிரத்தியேக செயலாளர் பணியின் இடையிலும் தனது கரும்புலியாகும் விருபத்தை தெரிவித்துக் கொண்டேயிருந்தான். குறைந்த இழப்பில் பெரும் இழப்பை எதிரிக்கு வழங்கி பெரிய வெற்றிகளைக் குவிக்கும் சிந்தனையே அவனது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்தது.


தொடர்சி...


Leave A Comment