பார்வையில்

1983-திருநெல்வேலி கண்ணிவெடி...சிப்பாயின் அனுபவம்...

1983 திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதல்...

உயிர் தப்பிய இராணுவச்சிப்பாயின் அனுபவங்கள்!


வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது 48 மணிநேர காலகட்டத்திற்குள் நடத்தப்பட்ட கொலைவெறி தாண்டவத்தில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டர்.


இதன் தொடர்ச்சியாக, கொழும்பு உள்ளிட்ட தெற்கு மற்றும் மலையக பகுதிகளில் தமிழ் மக்கள் மீது இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.


இந்த சம்பவங்களிற்கு வித்திட்டது, திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல்.


1983.ஜூலை 23 அன்று திருநெல்வேலி, தபால்பெட்டி சந்தியில் இலங்கை இராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இலங்கையில் அதிக இராணுவத்தினர் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

தாக்குதலிற்குள்ளான இராணுவ வாகன தொடரணியில் சென்ற இராணுவத்தினரில் இருவர் மட்டுமே உயிர்பிழைத்தனர். அதில் ஒருவர் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.


சார்ஜன்ட் உபாலி பெரேரா என்பவரே தாக்குதலில் உயிர் தப்பினார் அவர் தனது அனுபவங்களை சிங்கள ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.


“அந்த நேரத்தில் இராணுவத்தில் சேருவது மிகவும் கடினமான பணியாக இருந்தது. பல நேர்காணல்களுக்கு செல்ல வேண்டும். அங்கு, உயரம், கல்வித் தகுதிகள், விளையாட்டுத் திறன் மற்றும் குடும்பப் பின்னணி போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. எப்படியோ நான் 1973 ல் இராணுவத்தில் சேர்ந்தேன்.

 அடிப்படை பயிற்சி தியதலாவ இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றேன். எங்கள் குழுவில் சுமார் 450 பேர் இருந்தனர். 1971 ல் நான் இராணுவத்தில் சேர்ந்தபோது ஜே.வி.பி. எழுச்சிக்குப் பிறகு, நாடு அமைதியாக இருந்தது. எங்கள் பெரும்பாலான நேரம் பயிற்சி, விளையாட்டில் செலவிடப்பட்டது.

அந்த நேரத்தில் வடக்கு மாகாணத்தில் பயங்கரவாத பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றாலும், கடத்தல் பரவலாக இருந்தது. வட கடற்கரை இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால், இப்பகுதியில் கடத்தல்கள் பெரியளவில் இடம்பெற்றது.


அதாவது, ஓபியம், துணி, பீடி, போதை மருந்துகள் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டன. இதைத் தடுக்க, ஓகஸ்ட் 14, 1963 அன்று யாழ்ப்பாணத்தின் பலாலியில் குடிவரவு தடுப்பு முகாம் நிறுவப்பட்டது. கடற்கரையோரம் சிறிய முகாம்களை அமைத்தனர்.


ஆரம்பத்தில் நாங்கள் கடத்தலைத் தடுக்கச் சென்றோம், ஆனால் 80 களில் ஒரு குழு தமிழ் இளைஞர்கள் ஒரு தனி இராச்சித்திற்காக போராடுவதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆரம்ப நாட்களில், அவர்களின் இலக்குகள் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் போலீஸ் அதிகாரிகள். எனவே, இராணுவத்திற்கு அதிக வேலை இருக்கவில்லை.


நான் பணியாற்றிய 1வது காலாட்படை கொழும்பில் கடமையில் இருந்தது, யாழ்ப்பாணத்தில் சிங்க ரெஜிமென்ட் கடமையில் இருந்தது. பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து சிங்க ரெஜிமென்ட் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, எங்கள் ரெஜிமென்ட் யாழ்ப்பாணத்திற்குச் சென்று கடமையை ஏற்றது.


அப்போது ஆயுதப்படை புலனாய்வு ஒருங்கிணைப்பு தலைமையகம் யாழ்ப்பாணத்தின் குருநகரில் அமைந்திருந்தது. கூடுதலாக, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, மாதகல், பலாலி, ஆனையிறவில் ஆல்பா, பிராவோ, சார்லி, டெல்டா, எக்கோ எனப்படும் ஐந்து முகாம்கள் அமைக்கப்பட்டன. நான் மாதகல் முகாமில் கடமையில் இருந்தேன்.


1 வது இலங்கை காலாட்படை யாழ்ப்பாணத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்ட அதே நாளில், யாழ்ப்பாணத்தில் ஒரு சம்பவம் நடந்தது, இது விடுதலைப் புலிகளுக்கு பெரும் அடியாகும். அந்த நேரத்தில் புலிகளின் முக்கிய நபராக இருந்த சீலன் அல்லது சாள்ஸ் அன்ரனி, ஜூலை 15, 1983 அன்று இராணுவ கொமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்டார். சாள்ஸ் அன்ரனி பிரபாகரனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். 


பிரபாகரனின் மூத்த மகனுக்கு சாள்ஸ் அன்ரனி என்றும், பின்னர் புலிகளின் சிறந்த படைப்பிரிவு சாள்ஸ் அன்ரனி என்றும் பெயரிடப்பட்டது.

இதற்கிடையில், 23 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் ஏதாவது தாக்குதல்கள் நடக்கலாமென இராணுவ உளவுத்துறை தகவலை பெற்றது.


நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் புலிகள் சிறியளவில், ஒன்று இரண்டு வீரர்களை தாக்கினார்கள். ஆனால் ஒரு இராணுவக் குழு அல்லது முகாமை தாக்கவில்லை. இருப்பினும், ஆனைக்கோட்டை போன்ற பொலிஸ் நிலையங்களை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றினர்.


உளவுத்துறை செய்தியையடுத்து, ஒரு விசேட ரோந்து திட்டமிடப்பட்டது.

2 வது லெப்டினன்ட் வாஸ் குணவர்தன தலைமையிலான 15 பேர் கொண்ட எங்கள் அணி ரோந்திற்கு புறப்பட்டது.


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு ஆனந்தா-நாலந்தா கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்த போட்டியில் ஆனந்தா வென்றதை அறிந்த அவர், “கோப்ரல் உபாலி போட்டியில் நாங்கள் வென்றோம்" என்று என்னிடம் கூறினார். சக அதிகாரிகளிற்கு அவர் விருந்தளித்தார்.


அன்றைய ரோந்துக்கு வழங்கப்பட்ட ரகசிய குறியீடு 'பிராவோ 4'. ஆட்களை இருளில் அடையாளம் காண இரகசிய குறியீடாக இதை பயன்படுத்துவோம்.


ரோந்துக்காக ஒரு ஜீப்பும் லொரியும் வந்திருந்தன. லெப்டினன்ட் வாஸுடன் சுமார் 05 பேர் ஜீப்பில் ஏறினர். நான் சென்ற லொரியில் சுமார் 10 பேர் ஏறினார்கள்.


பலாலியிடமிருந்து கட்டளைகளை எடுத்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று நாக விஹாரை போன்ற இடங்களுக்குச் சென்று குருநகர் முகாமுக்கு அறிக்கை அளிப்பதாக இருந்தது.


இரவு 9.00 மணியளவில் கிளம்பினோம். எந்த பிரச்சனையும் இல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு வந்தோம். பின்னர் குருநகர் முகாமுக்குச் சென்று, மீண்டும் முகாமிற்கு புறப்பட்டோம்.


அப்போது நல்ல இருள். எங்கள் குழு பலாலி வீதியில் உள்ள பல்கலைகழகத்திற்கு அருகிலுள்ள திநெல்வேலியை அண்மித்தது. இடையிலிருந்த தபால்பெட்டி சந்தியிலேயே புலிகள் பதுங்கியிருந்தனர்.


இன்று இந்த இடம் ஒரு பரந்த வீதியாக உள்ளது, ஆனால் 1983 ஆம் ஆண்டில் இது இருபுறமும் கட்டிடங்கள் மற்றும் சுவர்களால் மூடப்பட்ட ஒரு குறுகிய வீதியாக இருந்தது.


அந்த நேரத்தில் அப்பகுதிக்கு தொலைபேசி வசதிகளை வழங்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. வீதியின் குறுக்கே பள்ளம் வெட்டப்பட்டிருந்தன.


செல்லக்கிளி தலைமையிலான புலிகள் தாக்குதலிற்காக வந்திருந்தனர். அதில் விக்டர், புலேந்திரன், சந்தோசம், அப்பையா, பசீர் காக்கா உள்பட 14 பேர் இரந்தனர்.

காங்கேசன்துறையில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்ட வெடிபொருட்களும் இருந்தன. தொலைபேசி திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வெடிபொருட்களை வைத்து மண்ணால் புதைத்தனர். பின்னர் அவர்கள் இருபுறமும் சுவர்களிலும், கட்டிடங்களிலும் மறைந்திருந்தனர்.


இரவு 11.00 மணி இருக்கும். எங்கள் இரண்டு வாகனங்களும் திருநெல்வேலியை நெருங்கிக்கொண்டிருந்தன. திடீரென்று ஒரு வெடிப்பு கேட்டது. முன்னாள் சென்ற ஜீப் அப்படியே நின்றது. குண்டுவெடிப்பில் யாரும் கொல்லப்படவில்லை. அதே நேரத்தில், இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன. நடு வீதியில் நின்ற எங்கள் மீது இருளில் மறைந்திருந்த புலிகள் தாக்குதல் நடத்தினர்.


நாங்களும் வாகனங்களில் இருந்து இறங்கி தாக்கினோம். வாகனங்களில் மறைந்திருந்து தாக்கினோம். நேரம் செல்ல செல்ல எங்கள் எதிர் தாக்குதல்கள் குறைந்துவிட்டன. எங்கள் தரப்பில் ஆட்களை இழந்தோம். என் இரு கால்களிலும் காயமடைந்தேன், உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டன. என்னுடன் அமர்ந்திருந்த லான்ஸ் கோப்ரல் சுமதிபால வயிற்றில் காயமடைந்தார். நான் சுமதிபாலவை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள தோட்டத்திற்குள் பாய்ந்தேன்.

சுமதிபாலவை ஒரு புதரில் மறைத்து, கத்த வேண்டாம் என்று சொன்னேன். அருகிலுள்ள கூரை மீது ஏறி பார்த்தேன். புலிகள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்திவிட்டு வீதிக்கு வந்து, வீழ்ந்து கிடந்த இராணுவத்தினரிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்களை எடுப்பது தெரிந்தது.


என் காலில் இருந்து ஓடிய ரத்தம் மரத்தால் வழிந்து தரையில் விழுந்தது. நாய் குரைத்தது. நான் என் பூட் லேஸை கழற்றி என் காலை இறுக்கிக் கட்டினேன். சிறிது நேரத்தில் புலிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.


நான் கீழே இறங்கி வீதிக்கு சென்றேன். அங்குள்ள காட்சி இன்றும் மறக்கமுடியாதது. இது ஒரு போர் திரைப்படக் காட்சி போலிருந்தது. சக வீரர்கள் வீதியில் ஆங்காங்கே விழுந்திருந்தனர். சார்ஜென்ட் திலகரத்ன பலத்த காயத்துடன் முனகிக் கொண்டிருந்தார். எங்கள் தலைமை லெப்டினன்ட் வாஸ் குணவர்தன தரையில் கிடந்தார். அவரிலும் கொஞ்சம் உயிரிருந்தது.


இனி என்ன செய்வது, முகாமிற்கு எப்படி தகவல் தெரிவிப்பது என யோசித்தேன். அப்போதுதான், இரண்டு மைல் தொலைவில் ஒரு கோண்டாவில் பஸ் டிப்போ இருந்தது நினைவிற்கு வந்தது. நான் காலில் காயத்துடன் பஸ் டிப்போவுக்குச் சென்றேன். காவலர் அங்கு நின்றார். 


அவரை என் காவலில் எடுத்து முகாமுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கச் சொன்னார். அவரும் மிகவும் பயந்து அழைப்புகளை எடுத்தார். சிறிது நேரம் கழித்து, எங்கள் பிராவோ அணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் வீரசிங்க வந்தார். எனது ஆயுதத்தையும் மீதமுள்ள

வெடிமருந்துகளையும் அவரிடம் ஒப்படைத்தேன்.

பின்னர் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றோம். காயமடைந்த சுமதிபால மறைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்தார். திலகரத்தின, சுமதிபால, நானும் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். எனினும், திலகரத்தின மருத்துவமனையில் இறந்தார்.


காலையில், அப்போதைய இராணுவத் தளபதி திஸ்ஸ இந்திக வீரதுங்க, டென்ஸில் கொப்பேகடுவ, சரத் முனசிங்க ஆகியோர் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு வந்தனர். சேவியர் என்ற தமிழ் மருத்துவர் ஒருவர் வந்து எனக்கு அறுவை சிகிச்சை செய்தார். அவர் அதை நன்றாக செய்தார். நான் எழுந்தபோது, என் மார்பில் ஒரு பதவி உயர்வு பதக்கம் இருந்தது. அதாவது, நான் கோப்ரல் பதவியில் இருந்து சார்ஜென்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டேன். இது இலங்கையில் முதல் போர்க்கள ஊக்குவிப்பு ஆகும். 


அன்று மாலை காயமடைந்த சுமதிபால மற்றும் நானும், 13 பேரின் உடல்களும் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

15 பேர் கொண்ட அணியில் 13 பேர் உயிரிழந்தனர். நானும், சுமதிபாலவும் தப்பித்தோம். இப்போது சுமதிபால உயிருடனில்லை" என்றார்.



லெப். செல்லக்கிளி அம்மான் நினைவினைச் சுமந்து. - 23.07.1983

Leave A Comment