பார்வையில்

மணலாறு படைமுகாம்கள் மீதான தாக்குதல்-28.07.1995

இலை குழைகளை தின்று உயிர் தப்பி தளம் திரும்பிய சிறுத்தைப் படையணி பெண் போராளிகள்.


1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான ஒரு படையணியை தமிழீழமும் சர்வதேச சக்திகளும் உணர்ந்து கொள்ள இருந்த நாள். 


இவர்கள் யார் என்று சிங்களப் படைகளும் அதன் அரசும் நிட்சயமாக உணர்ந்தன. ஆனாலும் துரோகத்தால் மலிந்து போன எம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல இழப்புக்களை நாம் சந்திக்க நேர்ந்த . நாளாக இன்றைய நாள் பதிவாகி இருந்தது.


சிறுத்தைப் படையணித் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் கோமளா உட்பட்ட 57 போராளிகளை நாம் இழக்க நேரிட்டதும். இன்றைய நாளில் தான். ஆனாலும் இன்றைய நாளும் இந்தச் சண்டையும் எமக்கு பெரும் வெற்றியைத் தந்திருந்தது. 


தமிழீழ பெண்களின் வீரத்தை சிங்களம் உணர்ந்து கொண்ட முக்கியமான சண்டையாக இது அமைந்தது.


இரவோடு இரவாக மணலாறு காட்டினூடாக தகர்தழிப்புத் தாக்குதல் ஒன்றுக்கான முழுத் தயார்ப்படுத்தலுடன் நகர்ந்திருந்தது. 


தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியான “சிறுத்தைப் படையணி” சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியான கேணல் ராஜூ அவர்களின் ஒருங்கிணைப்புக் கட்டளையின் கீழ் லெப் கேணல் கோமளாவின் வழிநடத்தலுடன் நகர்ந்து சென்ற அப்படையணியின் பெண் போராளிகள் பெரும் வரலாறு ஒன்றை பதிவு செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள்.


மண்கிண்டி மலை, கொக்குத்தொடுவாய், டொலர்பாம், கென்பாம், வெலிஓயா ( மணலாறு என்ற தமிழ் பெயரை நேரடியாக சிங்களத்தில் மொழிபெயர்த்து வெலி- மணல் , ஓயா – ஆறு இப்பெயரை வைத்திருந்தது சிங்கள அரசு) என்ற இடத்தில் அமைந்திருந்த “பராக்கிரம்பாகு “முகாம் போன்ற 5 பாரிய படைத்தளங்களின் ஒருங்கிணைப்புச் செயலகமாக இருந்த வெலிஓயா படைத்தளத்தை கட்டுப்படுத்தி சம நேரத்தில் நடக்க இருந்த ஏனைய படைத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய கட்டளைகளையும், வளங்கல்களையும், எறிகணை மற்றும் மோட்டார் உதவித் தாக்குதல்களையும் தடுக்கவும் என இவ்வணி வெலிஓயாத் தளத்தை நோக்கி சென்றது.


வெலிஓயா சார்ந்த பகுதிகள் எங்கும் சிறு சிறு அணிகாளாக பரவிக் கொண்டார்கள் சிறுத்தைப்படையணியின் பெண் போராளிகள்.


அந்த தாக்குதலுக்கு சென்ற அத்தனை போராளிகளும் சாதாரண போராளிகள் அல்ல. தமிழீழத்தின் உயிராயுதங்களுக்கு நிகரானவர்கள். கரும்புலிப் படையணிக்குள் உள்வாங்கப்படாமல் இருந்தாலும் சிறப்புப் படையணியாக இருந்து கொண்டு கரும்புலிகளின் தீரத்தோடு செயற்பட்டவர்கள். 


தாக்குதலுக்கு செல்லும் போது “சார்ச்சர்” எனக் கூறக்கூடிய வெடியுடையை அணிந்தே இவர்களும் சென்றிருந்தார்கள்.


அவ்வணிகளுக்குள் மேஜர் மாதங்கி தலமையில் ஒரு அணி வெலிஓயா படைமுகாமை தாக்கி அழித்து விடும் நோக்கத்தோடு உள் நுழைந்திருந்தது. ஏனைய அணிகள் வெலிஓயா படைமுகாமை சுற்றி படையினரின் வழங்கல் அணியினர் மற்றும் உதவி அணியினரின் வருகையைக் காத்து நிலையெடுத்திருந்தனர். 


எவ்வகையிலும் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முறியடிப்புத் தாக்குதலுக்கான ஆயுத்தத்தோடு கோமளா தனது போராளிகளை தயார்நிலையில் வைத்திருந்தார். முகாமுக்குள் உள் நுழைந்த அணி 3 பேர் கொண்ட சிறு அணிகளாக பிரிந்து அப்படை முகாமை தாக்கத் தயாராக இருந்தார்கள்.


அதே நேரம் பின்னணியில் தாம் வளர்த்த தமது சிறப்புப் படையணியின் முதல் வெற்றிச் செய்தியை கேட்க தயாராக இருந்தார்கள் தேசியத்தலைவரும் அவரது மூத்த தளபதிகளும்.


பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. எதிர்பார்ப்பு வீண்போகவும் இல்லை. உள்நுழைந்த வீர வேங்கைகள் சாதித்தார்கள். தாம் நேசித்த தலைவன் எதிர்பார்த்ததை செய்து முடித்தார்கள். விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியின் சிறுத்தைப் படையணியின் பெண் போராளிகள் என்றால் இது தான் என்று சர்வதேசத்துக்கும் சிங்களத்துக்கும் உணர வைத்தார்கள்.


இவ்வாறான காத்திருப்பு நேரத்தில் உள்நுழைந்த அணி சரியான இலக்குகளுக்குப் போய்விட்டதை உறுதிப்படுத்திய கோமளாவுக்கு ராஜூ அவர்கள் சண்டை ஆரம்பிப்பதற்கான சமிக்கையை கொடுக்க, தாக்குதலை ஆரம்பிக்க உத்தரவிடுகிறார் கோமளா.


பாரிய எதிர்ப்பின் மத்தியிலும் பெரும் பாதுகாப்பரன்களை உடைத்தெறிந்து உள் நுழைந்த படையணி சிறு சிறு அணிகளாக தாக்கத் தொடங்கியது. புலிகளின் அதிரடித்தாக்குதலை எதிர்பார்க்காத சிங்களப்படை திணறியது. 


எங்கு திரும்பினாலும் புலிகளின் ஆயுதங்கள் எதிரியை குறி வைத்தன. சிங்களப்படை செய்வதறியாது திகைத்த அதே நேரம் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தான் இச்சண்டையை செய்வதை எதிரி உணரத் தொடங்கினான். 


( சில வேளை காட்டிக் கொடுப்பாளர்கள் தகவல் சொல்லி இருக்கலாம்) அதனால் உள் நுழைந்த போராளிகள் அனைவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்குள் எழுந்தது. ஆனாலும் அவர்கள் எதிர்பார்க்காத தாக்குதல் வியூகங்கள் மூலமாக பெண்புலிகள் எதிரியை திக்குமுக்காட வைத்தனர்.


வெலிஓயா படைமுகாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணிப் போராளிகள். அங்கிருந்த தொலைத் தொடர்பு ( Communication) தொடக்கம் கட்டளைப் பீடம் ( Commanding Station ) வரை தமது கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணியின் சிறப்பு அணி.


தேசியத் தலைவரது திட்டத்தை நிறைவேற்றி அங்கே இருந்த ஆட்லறி எறிகணை ஏவுதளத்தை முற்றுமுழுதாக அழித்தார்கள். பக்கத்தில் இருந்த முகாம்களுக்கான வளங்கல்களையும் கட்டளைகளையும் நிறுத்தினார்கள். 


அங்கே தரித்து இருந்த 5 ஆட்லறிகள் முழுவதுமாக அழிந்து போனது. படைமுகாம் சிதைந்து கிடந்த நிலையில் ஆயுத வெடிபொருட்கள் முழுவதுமாக தீர்ந்து போகும் நிலை வந்து விட்டது. ஆனால் எதிரியின் துப்பாக்கிகளையும் ரவைகளையும் கைப்பற்றி எதிரியை தாக்கினார்கள். துன்பத்தை தந்தவனுக்கு துன்பத்தை அவனது துப்பாக்கியாலையே திருப்பிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 நாட்களாக தொடர்ந்த சண்டை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. எதிரியின் ரவைகளும் முடிகின்ற நிலைக்கு வந்திருந்தன.


இறுதியாக உடலோடு கட்டப்பட்டிருந்த வெடிமருந்துடை (சார்ச்சர்) மட்டுமே மிஞ்சி இருந்தது. அதை வெடிக்க வைத்து தம்மை உயிர்த்தியாகம் செய்ய அவர்களால் முடியும். 


ஆனால் அவர்கள் தாம் பயின்ற தற்காப்புக் கலையை ஆயுதமாக்கினர். கராத்தேக் கலையின் அதி விசேட பயிற்சிகளைப் பெற்றிருந்த அப்போராளிகள் இறுதியாக எதிரிகளை கொல்வதற்கு அதையே ஆயுதமாக்கினர். 


தமிழீழத்தின் மூத்த கராத்தே ஆசிரியர் ஒருவரின் நேரடி கற்பித்தலில் தாம் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலையினை இறுதிவரை பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்த வளர்ப்பு சரியாகவே வளர்க்கப்பட்டது என்பதை உணர்த்தினார்கள்.


தம்மிடம் இருந்த குத்துக்கத்தி மூலமாகவும் ( ஆயுத்ததோடு பொருத்தப்பட்டிருக்கும் கத்தி), கிடைக்கும் எப் பொருளையும் ( தடி, கம்பி, ) ஆயுதமாக பயன்படுத்தி கைகலப்பில் ஈடுபட்டார்கள். 


எதிரிக்கு பெண்புலிகளின் வீரத்தை உரைத்தார்கள். ஒரு நிலையில் எதிரியே “பெண்களா அல்லது பேய்களா இவர்கள் “ ( எதிரியின் உரையாடல்களை விடுதலைப்புலிகளின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு பிரிவு கண்காணித்த போது உறுதிப்படுத்தப்பட்டது. ) என்று பயந்து ஓடும் அளவுக்கு தாக்குதலை செய்தார்கள்.


பெண் புலிகள் தானே இலகுவாக உயிருடன் பிடித்து விடலாம் என்ற இறுமாப்போடு வந்த சிங்களப்படைகள் ஒவ்வொருவராக உயிரற்று போனார்கள். குறித்த சில வீரப் பெண்களின் வீரச்சாவோடு அந்த சண்டை வெற்றி வாகை சூடியது. 


இந்த நிலையில் ஏனைய அணிப் போராளிகளை தளம் திரும்புமாறு கேணல் ராஜூ அவர்களிடம் இருந்து கட்டளை வருகிறது.


தளபதி லெப் கேணல் கோமளா தன் போராளிகளை ஒருங்கிணைத்து வெற்றியோடு தளம் திரும்புகிறார். சிறு அணிகளாக இருந்தவர்கள் ஒருங்கிணைந்து மண்கிண்டிமலைப் படைமுகாம் நோக்கி வந்து மணலாறுக் காடுகளுக்கிடையில் பயணிக்கிறார்கள். 


அந்த வெற்றியின் உச்ச நேரத்தில் துரோகிகளின் துரோகத்தனத்தால் கோமளாவின் அணி பற்றிய முழுமையான தகவல்களுடன் அவர்களை இடை மறிக்கிறான் எதிரி. சரியாக திட்டமிட்டு இடை மறித்த எதிரியோடு சண்டை மூள்கிறது. 


கோமளா அணியை நிலை குலையாமல் ஒருங்கிணைக்கிறார். கேணல் ராஜூ நேரடியாக வழிநடத்துகிறார். ஆனாலும் தொடர்புகள் அறுந்து போகின்றன. கடுமையான முற்றுகை. அவர்கள் சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல ஆனால் சாதிக்கத் துடித்தார்கள்.


முழுமையாக திறனையும் பயன்படுத்தி சண்டை செய்தார்கள். இறுதியாக வெலிஓயாத் தளத்துக்குள் உயிருடன் பிடிபடாமல் போனவர்களை இங்கே பிடித்து விட வேண்டும் என்று துடித்தது சிங்களம். 


ஆனால் அவர்களால் முடியவே இல்லை. இறுதி வரை சிங்களத்துக்கு புலி வீரத்தை நிலைநிறுத்திய சிறுத்தைப் படையணியின் சிறப்பு அணி இறுதி வரை கைகளாலும் கால்களாலும் சண்டையிட்டது. 


நவீன போராட்ட முறமைகள் உட்புகுத்தப்பட்ட பின்பும் இவ்வாறான தாக்குதல்களை எதிரி சிந்தித்துப் பார்க்கவில்லை. திணறிப் போன சிங்களப்படையின் உயிருடன் பிடிப்பதற்கான கனவு மண்ணுக்குள் புதைந்து போனது. 


இவ்வாறு ஒரு புறம் வீரத்தின் உச்சங்கள் சண்டையிட்டு வீரச்சாவடைந்த அதே நேரம் இன்னும் ஒரு அணி தலைவனின் இன்னும் ஒரு எண்ணத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருந்தது.


“தேவையற்ற சாவுகளை தவிர்க்க வேண்டும் ” என்று தேசியத் தலைவர் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பெண் போராளிகள் அவ்வெண்ணத்தை நிறைவேற்ற முனைந்தனர். சக்தி, அஞ்சலை, உஷா, .உட்பட்ட 5 பெண் போராளிகள் உயிர்தப்பிப்பிழைத்தல் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.


“தப்பிப் பிழைத்தல்” என்பது அற்பதமானதும் மிகக் கொடுமையான செயல். 


இதன் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அனுபவித்தவர்களுக்கே அதன் உண்மை புரியும். பயங்கரமான எதிர் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் செயற்பாடாக இது கணிக்கப் படுகிறது. உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற சொல்லைக் கேட்டவுடனே எனக்கு 3 விடயங்கள் நினைவுக்கு வரும்


1. ஈராக்கில் தனது படையணியுடன் சண்டைக்காக சென்று உயிர் மீண்டு வந்த பிரித்தானிய இராணுவ வீரன் Chris Ryan இன் அனுபவக் குறிப்பான “ தப்பியவன் “ (The One That Got Away) நாவல்.


2. “Man vs. Wild” என்ற Discovery தொலைக்காட்சித் தொடர்.


3. செவ்வாய்க் கிரகத்தில் கைவிடப்பட்டு பூமிக்கு உயிருடன் திரும்பி விண்வெளி வீரன் ஒருவரின் கதையாகிய The Martian என்ற திரைப்படம்


இம் மூன்றுமே உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற விடயத்தின் ஆழத்தையும் அனுபவங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பேசுகின்றன. இதன் அனுபவம் என்பது வார்த்தைகளால் கூற முடியாதவை. அந்த வேதனைகளை யாரும் மறந்து விடவும் முடியாது.


இந்த நிலையில் தப்பிப் பிழைத்தல் பற்றி வெளிநாட்டவர்களின் அனுபவங்களை அறிந்த எமக்கு எம்மவர்கள் பற்றிய உண்மையான பல சம்பவங்களை அறிவதற்கு காலம் வழி விட்டதில்லை. அவ்வாறான தீரம் மிக்க பக்கம் ஒன்றை பகிரப்படாத பக்கம் தன் மீது பதிந்து கொள்கிறது.


மண்கிண்டிமலைப் படைமுகாம் அழிப்புக்குச் சென்ற இப் பெண் போராளிகள் உயிர் வாழ ஆசைப்பட்டவர்கள் அல்ல. தமிழீழத்துக்கான தமது தேவையை உணர்ந்தவர்கள். 


தாம் எதற்காக வளர்க்கப்பட்டோம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இலக்குத் தகர்க்கப்பட்ட பின் நடந்து கொண்டிருந்த வீரச்சாவுகளுக்குள்ளும் அவர்கள் தாம் சாவதை தவிர்தார்கள். சார்ச்சர் வெடிக்கத் தயாராக இருந்தாலும் வெடித்து சாவதை விட சாதிக்க வேண்டி சண்டைக் களங்களின் தேவையை உணர்ந்து தப்பிக்க முயல்கிறார்கள்.


உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. தேவையான ஆயுத வெடிபொருட்கள் இல்லை. சரியான தொலைத்தொடர்பு முறமைகள் கையில் இல்லை. இருந்தவையும் கைவிடப்பட்டுவிட்டன. 


ஆனால் எப்பிடியாவது உயிர் தப்பி தலைவனிடம் செல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டும் தான் அவர்களிடம் இருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற அவர்களால் தப்பிக்க இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் தப்பித்தார்கள்.


ஆட்லறித் தளத் தகர்ப்புத் தாக்குதல் நடவடிக்கைக்காக உயிர்க்கொடை செய்த தம் தோழிகளை விட்டுவிட்டு நடக்கத் தொடங்குகிறார்கள். அங்கிருந்து பல தடைகளைத் தாண்ட வேண்டும். 


சிங்களக் கிராமங்களை கடக்க வேண்டும். படை முகாங்களை தவிர்த்து வெளியேற வேண்டும். அதற்குள்ளே யாராவது தப்பித்திருக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு அனுப்பப்பட்டிருக்கும் ரோந்துக் காவல் அணிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடக்கும் போது சிங்கள வேட்டைக்காறரின் கண்களில் படவே கூடாது.


இப்படியாக பல தடைகளைத் தாண்ட வேண்டிய அவர்கள். சில முக்கிய வீதிகளையும் ஊடறுத்து வர வேண்டும். அவர்கள் வந்தார்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியவர்கள் பல வீதிகளைக் குறுக்கறுத்து கவனமாக கடந்து விடுகிறார்கள். ஆனால் இடையில் இருந்த பல படைமுகாம்களில் பல தடவைகள் முட்டுப்படுகிறார்கள். 


சிறிய சண்டைகள் மூண்டாலும் அவற்றில் இருந்து விலகி ஓடுகிறார்கள்.


கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவர்களின் முயற்சி காடு மலை என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. மணலாறில் தொடங்கியவர்கள் வவுனியாக் காட்டுக்குள் வந்து மிதந்தார்கள். 


அத்தனை நாட்களும் உணவில்லை காட்டு இலை குழைகளை பச்சையாக உண்டார்கள். சாப்பிடக் கூடியதாக எது கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்திக் கொண்டார்கள். காட்டுக்குள் இலைகளைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை மிருகங்களை வேட்டையாடினால் அதில் இருந்து வெளியேறும் வெடிச்சத்தம் இவர்களை இனங்காட்டி ஆபத்துக்களை கொண்டு வரும் என்பதை உணர்ந்து வேட்டையாடுவதை தவிர்த்தார்கள். இலைகளை மட்டுமே உண்டார்கள்.


காட்டுக்குள் அருவிகளை தேடிக் கழைத்து விட்ட நிலையில் வரண்டு கிடந்த உதடுகளை நனைக்க வேண்டும் என்று தண்ணீர்க் கொடியை தேடினார்கள். ஆனால் சில நேரத்தில் அவையும் கிடைப்பதில்லை. 


கிடைக்கும் நேரத்தில் தண்ணீர்க் கொடியைக் கொண்டு உதட்டை ஈரப்படுத்திக் கொண்டார்கள்.


உடலில் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்கத் தொடங்கிய அவர்கள் இறுதி வரை சோர்ந்து விடவில்லை. நடந்து கொண்டே இருந்தார்கள். நடந்து நடந்து வவுனியா காட்டினூடாக எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தேறிய போது அவர்கள் போராளிகளா என்ற சந்தேகம் எழுந்தது. 


ஏனெனில் அவர்களின் கோலம் அவ்வாறு மாகி இருந்தது. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். இவர்களும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு தாம் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம் என உறுதிப்படுத்தியவர்களாய் நிலத்திலே மயங்கி விடுகிறார்கள்.


துரோகத்தினால் முடிக்கப்பட்ட இவ்வெற்றிச் சண்டை தன்னுள் 57 சிறுத்தைப் படையணியின் சிறப்புப் பெண் போராளிகளின் தியாகத்தாலும் அவர்களின் வீரத்தாலும் மட்டுமல்லது அந்த பிரதேசத்தில் அன்று நடந்த ஐந்து படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் மொத்தமாக 180 எழுதமுடியாத பல காவியங்களை எழுதிச் சென்றது என்பது உண்மையே…


அனுபவக் குறிப்பு பகிர்வு: முதலாவது சிறுத்தைப் படையணியின் பெண் போராளி

எழுதியது: இ. இ. கவிமகன்


Leave A Comment