மாவீரர்கள்

கரும்புலி மேஜர் ரட்ணாதரன் - 09.08.1999

எதிரியின் தளம் சென்று பகை வென்ற கரும்புலி 

மேஜர் ரட்ணாதரன் - 09.08.1999


தென் தமிழீழம் 


1990களில் மட்டக்களப்பில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட வாகரை படை முகாமின் இரண்டாவது கட்டளை மேலாளரான மேஜர் கருணாநாயக்க மீது வாகரைப் படை முகாமில் வைத்து,


09.08.1999 அன்று கரும்புலித் தாக்குதலை நடாத்தி கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.


வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரட்ணாதரன்.


அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது.


நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு.


இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆனந்தன் அர்ச்சுனனின் வீரத்தையும் அபிமன்யுவின் விவேகத்தையும் கொண்டவனாகவே வந்து பிறந்தான்.


கிழக்கின் விடிவெள்ளிகளில் ஒருவனாகி அவன் ஒருநாள் விடி நட்சத்திரமாவான் என்ற உண்மையை காலம் எழுதி வைத்தது. அவன் கடவுளின் குழந்தையாகவே பிறந்தான் வளர்ந்தான் வாழ்ந்தான் வரலாறாகினான் என்பதையும் காலம் தன் பொன்னேட்டில் பொறித்தும் கொண்டது.


கல்வியில் சிறந்த மாணவனான ஆனந்தன் விவசாயத்தை நம்பிய உழைப்பாழியான அவனது தந்தைக்கு கல்வி நேரம் தவிர்ந்த நேரங்களிலெல்லாம் கைகொடுத்துக் கொண்டிருந்த தர்மன் அவன்.



புயலின் வீச்சையும் வேகத்தையும் அவன் பங்கு கொள்ளும் விளையாட்டுகளில் வெளிப்படுத்தும் சிறந்த விளையாட்டு வீரன். அமைதியான நீரோடையின் அசைவில் கேட்கும் மெல்லிய சங்கீதம் போல எப்போதுமே அவனது பார்வையும் பேச்சும் தன்னடக்கமும் எல்லோரையும் மதிக்கும் பண்பையும் கொண்ட மகத்தானவன்.


அடக்குமுறையாளர்களின் அக்கிரமங்களை , ஆதிக்க வெறியர்களின் அநியாயங்களையெல்லாம் அவனது கிராமமும் காலத்துக்குக் காலம் சந்தித்துக் கொண்ட சோகவரலாறுகள் பலதைத் தன்னோடு சுமந்து கொண்டிருந்த துயரங்கள் ஆனந்தனையும் தாக்காமல் கடந்து போகவில்லை.


பயமும் , பதற்றமும் , பலியெடுப்புகளின் இரத்த வாடையும் ஆனந்தனின் ஞாபகப்பதிவில் பதியப்பட்ட ஆறாத வடுக்கள் அவனது குழந்தை நெஞ்சில் நீங்காத துயரத்தை நிரந்தரமாக்கியது.


2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய 90களின் நடுப்பகுதியில் அவனது பிறந்த ஊரையும் அவனது மாவட்டத்தையும் பிணக்காடாக்கிக் கொண்டிருந்தது இனவாத சிங்களம். 


10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெட்டியும் குத்தியும் சுட்டும் தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கொடுமை நிறைந்த நாட்கள்.


12.06.1990அன்று கழுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரைச் சுற்றிவளைத்துப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். எதிரி கிராமங்களை நோக்கி உட்புகுந்து கொண்டிருந்தான். வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் , சொத்துகள், உடமைகள் யாவையும் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி அயல்கிராமங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.


ஊர்கள் அமைதியாகியது. கொலைஞர்கள் தங்கள் முகாம்களுக்குப் போயிருப்பார்கள் என நம்பினர் மக்கள். முதல்நாள் பசியோடு ஊரைத்துறந்தவர்கள் மறுநாள் பசிக்களைப்போடு தங்கள் வீடுகளை அடைந்தார்கள். 


ஆனந்தனும் அவனது குடும்பமும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்தார்கள். முதல்நாள் சமைத்து வைத்த உணவை ஆனந்தனும் அவனது குடும்பத்தினரும் சாப்பிடத் தொடங்க அங்கே பேரதிர்ச்சி அவர்களைத் தாக்கியது.


ஊரைவிட்டுப் போய்விட்டார்களென நம்பி ஊர் வந்தவர்களின் வளவுகளில் ஒளித்திருந்த சிங்களப்படைகள் துப்பாக்கி முனையில் அவர்களைச் சூழ்ந்தார்கள். 


ஆனந்தனின் குடும்பத்தோடு அயலவர்களையும் சேர்த்து 17பேரை களவாஞ்சிக்குடி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் பாதுகாப்புக்காக அவர்களைத் தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்ற சிங்களப்படைகள் அந்தப் 17பேரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்தார்கள்.


உயிர் தப்பிய நிம்மதியில் அவர்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தங்கள் அவர்களின் நடையின் வேகத்தைத் தளர்த்திப் போட்டது. செல்லும் வழியெங்கும் வெட்டியும் , குத்தியும் , சுட்டும் படுகொலை செய்யப்பட்ட பிணங்களை எண்ணிக் கொண்டே அவர்கள் வீடுகளை அடைந்தார்கள்.


அன்று 43அப்பாவித் தமிழ் உயிர்கள் சிங்கள கொலைகாரப்படைகளால் கொன்றொழிக்கப்பட்டிருந்தார்கள். ஆனந்தனின் அமைதியான முகத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள்…..! அவன் கண்முன்னே பிணங்களாகக் கிடந்த மனிதர்களின் நினைவுகள் அவனது அமைதியைக் கொன்றது.


எருவில் கண்ணகி வித்தியாலயத்தின் கல்வி பயின்று கொண்டிருந்தவனின் பாதையை மாற்றிய ஆதிக்க சிங்கள வெறியர்களின் பலியெடுப்புகள் அவனது கல்வியைத் தொடர முடியாமல் தடுத்தது. க.பொ.தா.சாதாரணதரத்தோடு கல்வியை நிறுத்திவிட்டு விடுதலை வேண்டிய புனிதப்பாதையில் ஆனந்தன் புலியாகினான்.


மென்மையான இயல்பும் மிருதுவான சிந்தனைகளையும் கொண்ட ஆனந்தன் பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து ஆயுதம் ஏந்திய போது இரும்பின் இறுக்கத்தையும் இமயம் வெல்லும் ஒழுக்கத்தையும் இலட்சிய உறுதியையும் பெற்றுக் கொண்டு வெளி வந்தான்.


ஒரு போராளியாக களமாடும் புலிவீரனாக பரிணமித்த ஆனந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட ரெட்ணாதரனென்ற ஆற்றளானனை புலிகள் இயக்கம் பெற்றுக் கொண்டது.


களமாடும் தருணத்தில் நெருப்பின் மையமாக போரிடும் ரெட்ணாதரனின் திறமையை மருத்துப்பிரிவு உள்வாங்கிக் கொண்டது. மருத்துவப் போராளியாக துப்பாக்கி ஏந்திய கையில் மருத்துவக் கருவியைத் தாங்கிக் கொண்டு களங்களில் நின்றான்.


அவனது முதல் மருத்துவப்பணி பூனகரி கூட்டுப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலின் போதே ஆரம்பமானது. முதல் களமருத்துவ அனுபவத்திலிருந்தும் அவன் கற்றுக் கொண்ட விடயங்களிலிருந்தும் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் தனது தேடலையும் முயற்சியையும் கைவிடாமல் கடமையை மறவாத செயல்வீரனாகினான்.


1994இல் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்தான். களமாடும் போராளிகளுக்கு மருத்துவனாக மட்டுமன்றி தாயாக , தந்தையாக அவர்களின் எண்ணங்களின் செயலாக மாறியிருந்தான். மட்டக்களப்பு கட்டுமுறிப்பு முகாம் மீதான தாக்குதலில் ஜெயந்தன் படையணியின் முதன்மை மருத்துவப் போராளியாகக் கடமையை ஏற்று அவன் செய்த மருத்துவப்பணியானது காலத்தால் மறக்காத சாதனை.


மருத்துவத்துறை சார்ந்து தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முகமாக மருத்துவத்துறையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கற்றுக் கொண்டான். கற்ற மருத்துவத்தை களத்தில் செயற்படுத்துகிற போது புதிய புதிய அனுபவங்களையும் தந்திரங்களையும் கற்றுக் கொண்டான்.


ஒவ்வொரு போராளிக்கும் அவன் தாயாக தந்தையாக மருத்துவனாக மட்டுமன்றி அண்ணனான தம்பியாக நல்லாசானாக அவன் எடுத்த அவதாரங்கள் பல. எத்தனை கடுமையான ஆபத்து நிறைந்த காயங்களோடு போராளிகள் வந்தாலும் அவர்களை அவனது வார்த்தைகளே உயிர் கொடுத்து அவர்களை இயங்க வைத்துவிடும். அப்படித்தான் அவன் எல்லோர் மனங்களையும் வென்ற மருத்துவப் போராளி.


ரெட்ணாதரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு 1994 சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தை காலத்தில் மாவடி முன்மாரி கோட்ட மருத்துவப் பொறுப்பாளராக நியமனம் பெற்று தனது பணியைத் தொடர்ந்திருந்தான்.


மருத்துவப் போராளியாக போராளிகளுக்கெல்லாம் சிறந்த மருத்துவனாகச் செயற்பட்ட ரெட்ணாதரன் அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு போதும் அந்த வலிகளை வெளிக்காட்டாமல் சாதனையொன்றுக்கான கனவோடு வாழ்ந்த சரித்திரம்.


அவனது மருத்துவப் பொறுப்பாளர் லெப்.கேணல் சாண்டோவுடன் தனது கனவுகளையெல்லாம் சொல்லிச் சொல்லி இலட்சிய நெருப்பை இதயத்தில் மூட்டித் திரிந்த கரும்புலி. கரும்புலியாய் கனவு வளர்த்த புலிவீரன் 1998ஆடிமாதம் அம்பாறையைச் சென்றடைந்தான்.


மிகுந்த சவால்கள் நிறைந்த அந்நாட்களில் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் பாதிப்பையும் பயத்தையும் சந்தித்த காலமது. அத்தனை சிரமங்களையும் அம்பாறையின் ஆறுகளோடும் கடலோடும் போராடி நீரோடும் நிலத்தில் உலவும் எதிரிகளின் அச்சுறுத்தல்களோடும் சோர்ந்து போகாமல் உணவு எடுத்துக் கொண்டு போய் சக போராளிகளுக்கு உணவளித்து உயிரளித்து களமாடும் போராளிகளோடு தனது மருத்துவப் பணியைச் செய்யச் சென்றிருந்தான் ரெட்ணாதரன்.


அம்பாறைக்காட்டில் வாழ்ந்த போராளிகளோடு தானும் வாழ்ந்து களமாடித் திரும்பும் வீரர்களின் மருத்துவனாகினான். அம்பாறை மண் சந்தித்த அனைத்து அவலங்களையும் தானும் அனுபவித்து அவலம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கும் நாளின் விடிவுக்காக விழித்திருந்து களமாடிய மருத்துவப்புலி ரெட்ணாதரன் 1999மாசிமாதம் சிவமூர்த்தி மேட்டுப்பிரதேசத்தின் மருத்துவனாகி பணிபுரிந்த கடவுள்.


திறமைகள் சார்ந்து போராளிகளை வளர்த்து ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கிவிடும் ஆசானாக பலரை உருவாக்கினான். என்றும் கருணையே நிறைந்த அவனது கவனிப்பில் விழுகிற அனைவரையும் ஆற்றல் மிக்கவர்களாக்கிய பெருமைகளையெல்லாம் கொண்ட பெருவிருட்சம் அவன். எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் அவனது அன்பும் பேச்சும் ஒவ்வொரு போராளியின் மனசிலும் அவனை நிரந்தரமாகினான்.


அழகான வாகரை மண்ணில் புலிகளின் வரலாறு முக்கியம் வாய்ந்த பெருமைகளையெல்லாம் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியினால் வாகரையில் 1990இல் நடாத்தப்பட்ட வாகரை மகாநாடு ஒரு வரலாற்றின் சாட்சியம்.


இந்த வாகரை மண்ணில் 22.06.1998 வாகரைச் சந்தியை தளமாகக் கொண்டு முகாமை அமைத்துக் கொண்டது. வாகரை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவனான இரண்டாவது கட்டளையதிகாரி கருணநாயக்கா என்ற சங்கிலி என்பவன் அங்கு அதிகாரியாக வந்திருந்தான்.


தனது சண்டைத் திறனாலோ அல்லது திறமையாலோ அவனுக்கு அதிகாரிப் பொறுப்பு கிடைக்கவில்லை. கிழக்கில் அவன் தமிழர்கள் மீது நடாத்திய படுகொலைகளுக்கான கௌரவமாகவே பொறுப்பதிகாரியாக தகைமை உயர்ந்தான் கருணநாயக்கா.


மட்டக்களப்பு மக்களின் உழைப்பில் விளைந்த பணம் , பொருள் , பொன் எல்லாவற்றையும் தனது அதிகாரத்தால் பறித்துக் கொண்டவன் கருணநாயக்க. தமிழரின் உழைப்பில் பெறப்பட்ட பொன்னையெல்லாம் கொள்ளையடித்த கருணநாயக்கவுக்கு தமிழர்கள் வைத்த பெயரே சங்கிலி.


சங்கிலி வருகிறான் என அறிந்தால் குழந்தைகள் முதல் பெரியவர் சிறியவர் பேதமின்றி காலனைக்காணும் பீதியை உணர்வார்கள். அத்தனை கொடுமைக்காரன் அவன். அவன் ஆசைப்படுகிற பெண்கள் யாரையும் விட்டுவைத்ததில்லை. தனது ஆயுதத்தின் துணையோடு அவனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் தொகை கணக்கில் எழுதப்படாதவை.


22.05.1987 அன்று மட்டக்களப்பு தோணித்தாண்டமடு பிரதேசத்தில் வயல்வேலை செய்யும் தொழிலாளிகள் தமது வாடிகளில் வேலையின் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 


உழைப்பின் களைப்பில் உறங்கிய அந்த அப்பாவி உயிர்களுக்கு சங்கிலியும் அவனோடு 60இற்கும் மேற்பட்ட சிங்களப்படைகளும் இரவோடிரவாகச் சுற்றி வளைத்திருந்தது தெரியாது. அந்த வாடிகளில் உறங்கிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாவரையும் வெட்டையொன்றுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றவன்.


அதுபோலவே 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990இல் வந்தாறுமூலை பல்கலைக்கழக்கத்திலிருந்த 158 தமிழ் மாணவர்களைக் கொன்றழித்த கொலைகாரன்........

தொடர்ந்து  படிக்க...


Leave A Comment